அரசியல்

"திமுக - தவெக இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளதா?" திருமாவளவன் கேள்வி!

தி.மு.க. - த.வெ.க. இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளதா? என்று திருமாவளவன் கேர்ள்வி எழுப்பியுள்ளார்.


Thirumavalavan question's
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, விஜய் அரசியல் பின்னணி குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

'விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?'

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூற வேண்டும் எனத் திருமாவளவன் வலியுறுத்தினார். விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றால், ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு என்ன காரணம் என்றும், தி.மு.க. - த.வெ.க. இடையே மறைமுக டீலிங் உள்ளதா என்றும், விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார் என்றும் அவர் வினவினார்.

'ஹஸ்கி வாய்ஸில் பேசினால்..'

கரூர் துயரம் குறித்து விஜய் வெளியிட்ட காணொலி குறித்தும் திருமாவளவன் விமர்சித்தார். "ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பிவிடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசியுள்ளார். மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார்" என்றும் அவர் கூறினார்.

'விஜய்யை காப்பாற்ற பா.ஜ.க. முயற்சி'

விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை என்றும், முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் தூண்டுதலே காரணம் என்றும் அவர் தெரிவித்தார். விஜய்யைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பா.ஜ.க. பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் என்று கூறிய திருமாவளவன், பா.ஜ.க.வின் திட்டமே தி.மு.க. கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதுதான் என்று குறிப்பிட்டார். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யைக் காப்பாற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்றும், விஜய்யின் கொள்கை எதிரியான பா.ஜ.கவே அவரைப் பாதுகாக்க முயல்வதன் மூலம் விஜய்யின் சாயம் வெளுத்துப் போய்விட்டது என்றும் அவர் கூறினார். அண்ணா ஹசாரே போன்று விஜய்யை பா.ஜ.க. பயன்படுத்துகிறது என்று கூறிய அவர், விஜய்யை பயன்படுத்தி அ.தி.மு.க.வை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு வர பா.ஜ.க. முயல்கிறது என்று தெரிவித்தார்.

விஜய் ஆபத்தான அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார் என்றும், வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் திருமாவளவன் கூறினார். மேலும், குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழிபோட முயற்சிக்கிறார் என்று குற்றம்சாட்டனார்.