அரசியல்

கரூர் துயரம்: 'விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது'- செந்தில் பாலாஜி விளக்கம்!

கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.

கரூர் துயரம்: 'விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது'- செந்தில் பாலாஜி விளக்கம்!
Senthil Balaji
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் அளித்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மிகக் கொடுமையானது என்றும், யாராலும் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயரச் சம்பவம் என்றும் அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று நாட்களாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை கரூரில் இதுபோன்ற ஒரு துயரச் சம்பவம் நடந்ததே இல்லை என்றும், எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் இனி இதுபோன்று நடக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும், கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

சம்பவத்திற்கான காரணம் மற்றும் பொறுப்பு

கரூர் துயரச் சம்பவத்தை அரசியலாகப் பார்க்க விரும்பவில்லை என்றும், யார் மீது தவறு எனப் பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், காவலர்கள் விஜய் வாகனத்தை முன்னதாக நிறுத்தக் கூறினர் என்றும், அவரைக் காண வேண்டும் என்பதற்காகவே கூட்டம் அவரைப் பின் தொடர்ந்தது என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.

விஜய் பேசிய 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டது என்றும், 16-வது நிமிடத்தில்தான் விஜய் தன்னைப் பற்றிப் பேசினார் என்றும் குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, "என் பெயரை விஜய் சொன்ன பிறகுதான் செருப்பு வீசப்பட்டதாகத் தவறான தகவலைப் பரப்புகின்றனர்" என்று கூறினார். கூட்ட நெரிசல் அதிகமாகும்போது, ஜெனரேட்டர் அறைத் தடுப்புகளை உடைத்துத் தொண்டர்கள் உள்ளே விழத் தொடங்கினர், அப்போதுதான் ஜெனரேட்டர்கள் ஆஃப் செய்யப்பட்டது என்றும், அப்போதும் கூடச் சாலை விளக்குகள் ஆஃப் செய்யப்படவில்லை என்றும், அவர்கள் கூடுதலாக அமைத்த விளக்குகள் மட்டும் தான் ஆஃப் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், "வீடியோவில் எல்லாம் தெளிவாக உள்ளது, எங்கும் மின் விநியோகம் தடைபடவில்லை" என்று கூறினார்.

விஜய் குறித்த விமர்சனம்

கரூர் துயரச் சம்பவத்தை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கும் வகையில் விஜய் பேசுகிறார் என்று செந்தில் பாலாஜி விமர்சித்தார். "விஜய்யின் விக்கிரவாண்டி, மதுரை என அனைத்துக் கூட்டங்களிலும் தொண்டர்கள் பாதிக்கப்பட்டனர். விஜய்க்கு வருவது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்" என்று அவர் கூறினார்.

மேலும், கரூர் பரப்புரையின் போது குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூடத் தவெக தரப்பில் செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், சம்பவம் நடந்த அடுத்த நாளில் 2,000 செருப்புகளுக்கு மேல் கிடந்தன என்றும், காலி தண்ணீர் பாட்டில் ஒன்றாவது நீங்கள் பார்த்தீர்களா? என்றும் கேள்வியெழுப்பினார்.

குறித்த நேரத்தில் வராததால் விபத்து

"விஜய், அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்சினையே நடந்திருக்காது" என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார். கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் எனக் கணித்து அதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு என்றும், கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7,000 பேர் நிற்கலாம், உழவர் சந்தை அருகே அதிகபட்சம் 5,000 பேர் கூடலாம் என்றும் அவர் கூறினார். கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் என்றும், அரசு தன் கடமையைச் சரியாகச் செய்தது என்றும், ஆனால் அந்த அரசியல் கட்சி தனது கடமையைச் சரிவர செய்யவில்லை" என்று குற்றசாட்டினார்.