அரசியல்

மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் - சீமான் அறிவிப்பு!

போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் - சீமான் அறிவிப்பு!
மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் - சீமான் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார், பேராசிரியை நிகிதாவின் நகை மாயம் குறித்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரிக்கப்பட்ட போது உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. - பா.ஜ.க சார்பில் திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதேபோல், துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்புவனத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சீமான் அறிவித்திருந்தார். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் எனவும், போராட்டம் நடத்த மட்டும் தான் அனுமதி கேட்டோம், பாதுகாப்பு கேட்கவில்லை என கூறினார்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பில் 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. கோவில் தேரோட்டங்கள், வாரச்சந்தை நடைபெறுவதால் அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.