அரசியல்

"செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க தயக்கம் இல்லை-" எடப்பாடி பழனிசாமி பதில்!

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Edappadi Palaniswami
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இனிமேல்தானே இருக்கும்" என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

'ஒன்றாக இணைவது தேவையற்றது'

ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமியே தங்கள் எதிரி என்று கூறியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைவதே தேவையற்றது. இவர்கள் மூவரும் தி.மு.க.-வின் பி டீமாகச் செயல்படுகிறார்கள். 3 பேரும் இல்லாததால் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. பலவீனமடைந்து விட்டதாகக் கூறுவது தவறானது.

கட்சியில் இருந்து களைகள் அகற்றப்பட்டுள்ளன. இனி கட்சி செழித்து வளரும். கட்சியில் இருந்துகொண்டே உள்குத்து வேலைகள் செய்ததால்தான் 2021-ஆம் ஆண்டு அ.தி.மு.க. தோல்வியை அடைந்தது" என்றார்.

செங்கோட்டையன் மீது நடவடிக்கை

ஓ. பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இருந்து நீக்கியது போல, செங்கோட்டையனை நீக்க என்ன தயக்கம் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எங்களுக்குத் தயக்கம் எதுவும் இல்லை. இனிமேல்தானே இருக்கும். ஏற்கனவே கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுவிட்டன.

அ.தி.மு.க.-வைப் பொறுத்தவரை யார் துரோகம் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.-வில் எத்தனை எட்டப்பர்கள், துரோகிகள் வந்தாலும் வீழ்த்த முடியாது. எங்கள் பக்கம் இருப்பது உண்மையான அ.தி.மு.க.வினர்" என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

இதன் மூலம், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் கைகோத்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.