திமுகவில் குறுநில மன்னர்களாக சிலர் வலம்வந்த காலம் மலையேறிவிட்டது என்றே தெரிகிறது. கட்சியை வலுப்படுத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரின் அதிகாரத்தைப் பறித்து புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது அறிவாலயம்.
கட்சி ரீதியாக 72 மாவட்டங்களாக செயல்பட்டு வந்த தி.மு.கவின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளது கட்சித் தலைமை. அதன் எதிரொலியாகத்தான் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை மேலும் பிரித்து மாவட்டங்களின் எண்ணிக்கையை 76 ஆக உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் நிர்வாக வசதிக்காகவும், கட்சியை வலுப்படுத்தவும் என்று சொல்லப்பட்டாலும் பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இப்படி வெளியான இந்த மாவட்ட பொறுப்பாளர் பட்டியலில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பை லட்சுமணனுக்கு வழங்கியது தலைமை. அமைச்சர் பொன்முடிக்கு வைக்கப்பட்ட செக்காக இது பார்க்கப்படுகிறது. மேலும், தோப்பு வெங்கடாசலத்திற்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பு வழங்கியதால் அமைச்சர் முத்துசாமியின் அதிகாரம் பங்கு போடப்பட்டுள்ளது.
'இந்த மாற்றங்கள் தொடரும்' என்ற ஸ்டாலினின் சூசக பேச்சால் சீனியர் அமைச்சர்கள் பலர் அதிர்ச்சியில் இருப்பதாக காதைக் கடிக்கிறது அறிவாலயப் பட்சி. இதன் ஒரு பகுதியாக தான் மதுரையில் மாவட்டச் செயலாளர் பதவி கேட்ட அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக தலைமை பெப்பே காட்டியதாக அப்பகுதியில் ஒரு தரப்பினர் தகித்துக் கொண்டுள்ளார்களாம்....
பிடிஆருக்கு பதிலாக, மதுரை மாநகரில் மாவட்டத்துக்கு கோ.தளபதி, புறநகர் தெற்கு மணிமாறன், புறநகர் வடக்கு அமைச்சர் மூர்த்தி என 3 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். நான்கு தொகுதிகளை வைத்திருந்த தளபதியிடம் இருந்து மதுரை மேற்கு தொகுதியைப் பிடுங்கி கூடுதலாக அமைச்சர் மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரப்பில், மதுரை மத்திய, மற்றும் மதுரை மேற்கு ஆகிய தொகுதிகள் அடங்கிய மாவட்டத்துக்கு பொறுப்பு கேட்டதாக கூறப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர் தளபதியும் அமைச்சர் மூர்த்தியும் கூட்டணி அமைத்து வேட்டு வைத்ததால் பி.டி.ஆர். மன உளைச்சலில் இருக்கிறார் என அவருடைய ஆதரவாளர்கள் தகித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், திமுக எம்.எல்.ஏ கோ.தளபதிக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம் தான். சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கூட பழனிவேல் தியாகராஜனின் பெயரை கடைசியில் வரிசைப்படுத்தி அழைப்பிதழ் அச்சிடப்பட்டு பிரச்சனை ஆனது. இப்படி பி.டி.ஆருக்கு எதிரான கோ.தளபதியின் செயல்பாடுகளுக்கு பின்னணியில் அமைச்சர் மூர்த்தி தான் காய்நகர்த்தி வருகிறார் என்கிறனர் சில விவரப்புள்ளிகள்.
இந்நிலையில் மீண்டும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் மூலம் அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கியிருப்பது, தங்களை ஏகத்துக்கு டென்ஷனாக்கி உள்ளதால், அறிவாலய கதவை அமைச்சர் பிடிஆரின் தரப்பினர் தட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அடுத்த மாவட்ட பொறுப்பாளர் பட்டியலிலாது பிடிஆரின் பெயர் இடம்பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..