மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக நேற்றைய தினம் (செப்டம்பர் 11) கோவை வந்திருந்தார். நேற்று மாலை கோவை கொடிசியா அரங்கில், பல்வேறு தொழில் அமைப்புகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் வங்கி இயக்குநர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் நீண்ட ஆலோசனைக்கு பின்பு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “தொழில்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நமது நாட்டின் 1,500 தொழில்சட்டங்களை எடுத்து விட்டோம். 40 ஆயிரம் புகார்களை குறைத்திருக்கிறோம். 2016-ம் ஆண்டில் இருந்தே தொழில் வளர்ச்சிக்கு உகந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 70 இடங்களில் சிட்பி வங்கிகளை(தொழில் வளர்ச்சி வங்கி) நாங்கள் திறக்க உள்ளோம். 5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெற தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் கடனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார்.
இதையடுத்து இரண்டாவது நாளான இன்று (செப்டம்பர் 12) காலை கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், அவரது சொந்த முயற்சியில் சுயம் என்னும் திட்டத்தை ஏற்படுத்தி, நலிவுற்ற ஏழை,எளிய பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கி வந்தார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஏழை எளிய பெண்களுக்கு 1500 தையல் இயந்திரங்களை பரிசாக வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதன் பின்பு மேடையில் பேசிய அவர், “பாரதப் பிரதமர் மோடி தனது ஆட்சியில், ஏழை எளிய மக்கள் மற்றும் பின்தங்கிய மட்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு, பல முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம், நாட்டின் 60 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது பெண்கள் பொருளாதார முறையில் முன்னேற்றம் அடைய வழி செய்கிறது. பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு, பலவிதமான திட்டங்கள் மூலம் வங்கிகள் கடனுதவி வழங்கி வருகிறது. பெண்களுக்கு திறன் மேம்பாடு குறித்த பயிற்சி கொடுப்பதற்காக 311 மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் ஐடிஐயில் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த மையத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: காம்ரேட் சீதாராம் யெச்சூரி..மறைந்த தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தும் அரசியல் தலைவர்கள்
பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இரவு மீண்டும் டெல்லிக்கு திரும்புகிறார்.