Comedy Actor Vadivelu 64th Birthday Special Story in Tamil : எப்படிப்பட்ட துயரிலிருந்தும் நம்மை விடுவிக்கிற அல்லது கணநேர இளைப்பாறுதலை அளிக்கிறவனே அசல் கலைஞன். அந்த வகையில் தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நம் காலத்தின் மகத்தான கலைஞன் என்றே சொல்ல வேண்டும். வாழ்வின் அத்தனை தருணங்களிலும் வடிவேலுவை நம்மோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்பதே அவர் நிகழ்த்தியிருக்கும் பெரும் சாதனை. எத்தனையோ கலைஞர்களைப் பார்த்திருக்கிறோம். இன்னும் பலரை பார்க்கவிருக்கிறோம். இருந்தும் வடிவேலு உருவாக்கியிருக்கும் தனித்துவமான இடத்தை இட்டு நிரப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று நமக்குத் தோன்றுகிறதல்லவா? ஆகவேதான் அவர் மகத்தான கலைஞன்.
கதாநாயகர்களாக நடித்து தனக்கென பெரும் ரசிகப்பரப்பைக் கொண்டிருக்கும் நடிகர்கள் கூட தங்களது அரசியல் புரிதலற்ற கருத்துகளின் விளைவாக சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறார்கள். ஆனால், திரைப்படங்களில் காமெடியனாக நடித்த வடிவேலு சமூக வலைதளங்களில் நாயகனாகக் கொண்டாடப்படுகிறார். யதார்த்த வாழ்வில் நாயகனாக கொண்டாடப்படுகிறவர் திரைக்குள் காமெடியனாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் என்கிற இந்த முரண்பாட்டைக் கொண்டுதான் நாம் வடிவேலுவைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழர்களிடையே வடிவேலு இப்பெரும் ஈர்ப்பினை நிகழ்த்தக் காரணம் அவர் தன்னை சராசரி மனிதனின் பிம்பமாக முன் வைத்ததுதான். மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சாமானியர்களின் நடவடிக்கைகளையும், அவர்களது உடல் மொழியையும் கொண்டு தனக்கான உடல் மொழியை உருவாக்கிக் கொண்டார் வடிவேலு. ஆகவேதான் வடிவேலு நடித்த கதாப்பாத்திரங்களை நாம் யதார்த்த வாழ்வில் எதிர்கொள்கிறோம். சொல்லப்போனால் நாமும் ஏதேனுமொரு கதாப்பாத்திரத்தின் தன்மையைக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்த் திரையுலகில் கவுண்டமணியின் ஆளுகை உச்சத்தில் இருந்த நேரம். கருத்த நிறம், ஒல்லியான தேகம். திரையுலகம் பொருட்படுத்திக்கொள்ளும் எந்த முகாந்திரமும் அற்ற தோற்றம். ‘என் ராசாவின் மனசிலே’ என்கிற திரைப்படத்தில் ராஜ் கிரண் மூலம் அறிமுகம் செய்யப்படுகிறார் வடிவேலு. அன்றிலிருந்து கவுண்டமணி ஆளுகை செலுத்திய காலம் முழுவதும் வடிவேலுவுக்கு வாய்க்கப்பெற்றது சிறிய அளவிலான கதாப்பாத்திரங்களே. அவற்றுள் பெரும்பாலானவை செந்திலோடு சேர்ந்து கவுண்டமணியிடம் அடி வாங்கும் கதாப்பாத்திரம்.
திரைத்துறையில் எந்த வித முன் தீர்மானங்களுக்கும் இடமில்லை. அது அவ்வப்போது பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கும். அப்படியொரு அதிசயமாய் உருவெடுக்கிறார் வடிவேலு. கவுண்டமணி – செந்தில் கூட்டணியின் நகைச்சுவை பெரும் வரவேற்பைப் பெற்றது. கவுண்டமணி செலுத்தக்கூடிய ஆதிக்கமே அங்கே நகைச்சுவையாக உருக்கொண்டது. ஆதிக்கம் என்பது அவரது வெளிப்பாடுதானே தவிர நம் சமூகத்தின் கீழ்மைகளை அதே நிமிர்வோடு சொன்னார் கவுண்டமணி. கால சூழல் மாற்றத்தில் தமிழ் திரைப்பட நகைச்சுவை அம்சமும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் முனைப்பில் இருக்கையில் வடிவேலு ஓர் பாதையை அமைக்கிறார்.
யார் மீதும் ஆதிக்கம் செலுத்துவதாக இல்லாமல் தன்னையே கேலிப்பொருளாக்கி மக்களை சிரிக்க வைப்பது என்பதுதான் அவர் வகுத்த உத்தி. தான் மதுரையில் சந்தித்த பல்வேறு விதமான கதாப்பாத்திரங்கள், அவர்களது வெற்று சவடால்கள், மிடுக்காகத் திரியும் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் அப்பாவித்தனம் என பலவற்றையும் உள்வாங்கி தனக்கானதொரு உடல் மொழியை உருவாக்குகிறார் வடிவேலு.
அதிரடியான சண்டைக்காட்சிகளில் நடிப்பவர்களை விட, தங்களை சிரிக்க வைக்கிறவர்களையே குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். தனது வேறுபட்ட உடல்மொழியைக் கொண்டு வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தன. குறிப்பாக குழந்தைகள் அவரைக் கொண்டாட ஆரம்பித்தனர். வடிவேலுவின் வசனங்களை அவர்களும் பேசிச் சிரித்தனர். திரைத்துறையைப் பொறுத்த வரை குழந்தைகளை யார் கவர்கிறார்களோ அவர்களுக்குத்தான் பெரிய மார்கெட் உருவாகும். அப்படித்தான் வடிவேலுவுக்கான மார்க்கெட் உருவானது. சூப்பர் ஸ்டாரே வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கி வாருங்கள் என்று சொல்லுமளவுக்கு உச்சம் தொடக்காரணமாக இருந்தது வடிவேலுவின் பிறதொன்றில் இல்லாத தனித்தன்மைதான்.
பெருநகரவாசிகள் தொடங்கி கிராமவாசிகள் வரை எவ்வித பாரபட்சமுமின்றி அனைவரது விருப்புக்கும் உள்ளான கலைஞனாக உருவெடுத்தார். நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியான நகைச்சுவைகளைக் கொடுத்தார். இது வடிவேலுவின் காலம் என்று சொல்லும்படியாக திரைத்துறையில் ஒரு காலகட்டத்தையே முழுவதுமாக ஆட்சி செய்தார் வடிவேலு. இவரது நகைச்சுவை இல்லாமல் படம் ஓடுமா என்று கேட்கும்படியாக ஒரு காலகட்டம் இருந்தது.
அவர் மக்களின் அன்றாடத்தோடு கலக்க ஆரம்பித்தார். பலரது வீடுகளில் அவரும் ஒருவராக வாழ்ந்தார் என பலரும் சொல்வார்கள். வடிவேலுவின் நகைச்சுவைகள் இடம் பெறாத டிவி சேனல்களே இல்லை என்கிற நிலை உருவானது. வடிவேலு இல்லாத நகைச்சுவையா என்று கேட்கும் படியான ஓர் இடத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவர் அதனைச் செய்தார்.
காய்கறி வியாபாரி, மீன் வியாபாரி, ஆட்டோ ஓட்டுநர், தபால்காரர், கோவில் மணி அடிப்பவர், வழக்கறிஞர் வேலைவெட்டிக்குச் செல்லாத தண்டச்சோறு என வடிவேலு ஏற்று நடிக்காத கதாப்பாத்திரங்களே இல்லை. அத்தனை கதாப்பாத்திரங்களுக்கும் பின் இருக்கிற சமூகத்தின் பொதுப்பார்வையை எல்லாம் தனது நகைச்சுவை மூலம் அடித்து நொறுக்கினார் வடிவேலு. நாயகர்களாகவும், வில்லன்களாகவுமே காட்டப்பட்டு வந்த போலீஸ் கதாப்பாத்திரத்தை நகைச்சுவைக்குள் பொருத்தியது வடிவேலுதான். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் அவர் நாயகனாவும் நடித்தார். முழுவதும் சமகால அரசியலைப் பகடி செய்யும் விதமாய் எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தில் வடிவேலுவைத் தவிர யாராலும் நடித்திருக்க முடியாது.
வடிவேலு திரைத்துறையில் நிகழ்த்திய இது போன்ற அளப்பரிய சாதனைகளை பட்டியல் நீண்டது. அவரது தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து திரைத்துறையிலிருந்து சற்றே விலகியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். சமூக வலைதளங்கள் எழுச்சியடைந்த காலகட்டத்தில் வடிவேலு வீழ்ச்சி கண்டிருந்தார். ஆனால், அவரது நகைச்சுவைக்காட்சிகள்தான் இன்றைக்கு வரைக்கும் மீம் டெம்ப்ளேட்டுகளாக உலவி வருகின்றன. மீம் கிரியேட் செய்பவர்கள் அனைவரும் வடிவேலுவை ‘மீம் காட்’ என்று அழைக்கின்றனர். எப்படிப்பட்ட தருணத்துக்கும் ஒரு மீம் டெம்ப்ளேட்டை வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளைக் கொண்டு உருவாக்க முடியும் என்பதே அதற்குக் காரணம்.
எந்த ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானாலும் சமூக வலைதளங்களில் அதன் வடிவேலு வெர்சன் வெளியாகும். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்த நாளே படக்குழுவினரே அந்த போஸ்டருக்கான வடிவேலு வெர்சனையும் வெளியிட்டார்கள். சம காலத்தில் வடிவேலு அளவுக்கு தாக்கம் செலுத்திய நகைச்சுவைக் கலைஞன் யாரும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நகைச்சுவைக் கலைஞன் மட்டுமா வடிவேலு? என்றால் இல்லை. இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தில் புலிகேசி என்கிற கோமாளி அரசனாக வடிவேலு வெடிச்சிரிப்பை வரவழைத்திருப்பார். அதற்கு நேர் எதிர் தன்மையுடன் போர்க்குணம் மிக்க உக்கிரபுத்தனாக வடிவேலு நடித்திருப்பார். அந்தக் கதாப்பாத்திரத்தில் வடிவேலுவை நாம் எத்தனை முறை பார்த்தாலும் வடிவேலுவை நாம் பார்க்கவே முடியாது. பல நூறு படங்கள் வழியே நமக்குப் பரிச்சயப்பட்ட அந்த முகமும் அதன் பாவனைகளும் அற்ற உக்கிரபுத்தனாகத்தான் என்றைக்கும் தெரிவார். கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்தில் மாமன்னனாக கையறு நிலையில் கதறி அழுவது, “வேலு... வேணாம்டா தப்பு பண்ற” என்று வில்லனிடம் இறைஞ்சுவது, கையில் துப்பாக்கி ஏந்தியபடி “நம்மளைக் கொல்லணும்னு நினைக்கிற ஒருத்தன் உசுரோட திரும்பக்கூடாது” என்று துணிச்சலாகக் கூறும் இடங்களில் எல்லாம் தான் ஒரு நகைச்சுவை நடிகன் மட்டுமல்ல என்பதை அழுத்தமாக உணர்த்தியிருப்பார்.
சமூக வலைதளங்கள் முழுவதும் வடிவேலு நிறைந்திருக்கிறார். மக்களுக்கான கலைஞர்களை மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்தான் வடிவேலு. ஏன் வடிவேலு நம் விருப்புக்குரிய கலைஞராக இருக்கிறாரென்றால், நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு தருணத்திலாவது வடிவேலுவாக வாழ்கிறோம் அல்லது வாழ ஆசைப்படுகிறோம். நம் காலத்தின் மகத்தான கலைஞன் வடிவேலுவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
- கி.ச.திலீபன்