மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக ஜெயலலிதா பேரவை சார்பில் திருமங்கலம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்துவதற்கு என்ன மரபு இருக்கிறது என தெரியவில்லை. அனைத்து துறைகளையும் ஆய்வு செய்ய முதலமைச்சருக்கு மரபு உள்ளது. சிறப்புத் திட்ட செயலாக்க துறையில் அனைத்து துறையையும் ஆய்வு செய்கின்ற ஏமாற்ற வேலையை செய்கிறார்கள். ஆய்வின்போது தவறான தகவலை சொல்லியதாக இரண்டு அதிகாரிகளை பணி நீக்கம் செய்கிறார். ஒன்று விசாரணை செய்ய வேண்டும் இல்லை என்றால் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அதன் பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இது என்ன சர்வாதிகார நாடா? உதயநிதியிடம் தவறான தகவலை சொன்னதாகக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் என்ன மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். அவர் சொன்ன தகவல் உண்மை இல்லை என்பதை எப்போது விசாரித்தீர்கள்? இது அரைவேக்காட்டுத்தனம்.
நான் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு கதாநாயகன் போல் ஆய்வு செய்ய யார் உரிமையை கொடுத்தது? அனைத்து துறை அலுவலகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றால் ஒன்று மாவட்ட தலைவராக இருக்க வேண்டும் இல்லையென்றால் முதலமைச்சர் ஆக இருக்க வேண்டும். ஸ்டாலின் உதவாக்கரை என்று சொல்லிவிட்டு உதயநிதி ஸ்டாலினை வேண்டுமென்றால் முதலமைச்சராக்கி விடுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கி அவரை சைக்கிள் ஓட்ட விட்டு, உடற்பயிற்சி கூடத்தில் எக்சர்சைஸ் செய்யவிட்டு நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவது எந்த அடிப்படையில் என்று மக்கள் கேட்கிறார்கள். முரண்பாட்டின் மொத்த உருவமாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.
மேலும் படிக்க: 60 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்கு.. மோடியை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்!
நேற்று காலை ஆட்சித்தலைவரையும் அரசு ஊழியர்களையும் பாராட்டி விட்டு நேற்று மதியம் மூவரை சஸ்பெண்ட் செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கு எச்சரிக்கை கொடுத்து விசாரணை நடத்தி இருக்கலாம், விளக்கம் கேட்டிருக்கலாம். ஆனால் எதுவும் இல்லாமல் நடவடிக்கை என்பது ஹிட்லர் ஆட்சியை விட மோசமாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் பட்டாபிஷேகத்துக்கான ஆயத்தப் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டமாக தெரிகிறது தவிர மக்களுக்கு பலனளிக்கக்கூடிய ஆய்வுக் கூட்டமாக தெரியவில்லை” என ஆவேசமாகப் பேசினார்.