அரசியல்

மகனா? சத்யாவா? விழிப்பிதுங்கும் வைகோ.. ஸ்மார்ட் மூவ் செய்த துரை வைகோ

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், தான் வகித்து வரும் கட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். 32 ஆண்டுகளாக வைகோவின் நிழலாக உடன் பயணித்துவரும் மல்லை சத்யாவுக்கு எண்ட் கார்டு போட துரை வைகோ திட்டமிட்டு நகர்த்திருக்கும் ஸ்மார்ட் மூவ் தான் இந்த பதவி விலகல் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மதிமுகவின் தலைமைக்கழகச் செயலாளராகப் பதவியேற்றார் துரை வைகோ, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த நிலையில் அப்பதவியிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். இதுத்தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள துரை வைகோ, ”கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளது தான் ஒட்டுமொத்த அறிக்கையிலும் ஹைலைட்.

யார் அந்த நபர்?

யார் அந்த நபர் என யோசிக்கவே தேவையில்லை என்பதை தான் சமீப கால அரசியல் நிகழ்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. சமீப நாட்களாகவே மல்லை சத்யா மற்றும் துரை வைகோ தரப்பினர் இடையே கருத்து மோதல்கள் நடைப்பெற்று வந்த நிலையில், மதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது தற்போது.

ஒருகட்டத்தில் திமுகவின் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்துப் பேசிவந்த வைகோ யாரும் எதிர்பாராத வகையில் மகன் துரை வைகோவுக்கு கட்சி பொறுப்புகளை வழங்கினார். இறுதியாக துரை வைகோவுக்கு கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்களில் எஞ்சியிருப்பவர் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மட்டுமே. இப்போது அவரையும் கட்டம் கட்ட முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

மல்லை சத்யா நீக்கம்- தீர்மானம் நிறைவேற்றம்:

துணை பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யா பெயரை கட்சி நிகழ்ச்சிகளின் பேனர் போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என்று துரை வைகோ தரப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என தீர்மானம் போட்டு தாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஏப்ரல் 12 ஆம் தேதி மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழு கூட்டம் தாயகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வைகோவின் சாதியை சேர்ந்தவர்களுக்கே தொழிற்சங்கத்தில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது ஒரு நிர்வாகி மல்லை சத்யா பெயரை குறிப்பிடாமல் ’அவரை நான் வெட்டிவிட்டு சிறைக்குப் போய்விடுகிறேன்' என்று ஆவேசமாகப் பேசினார்.

அப்போது, துரை வைகோவும் அந்த நிர்வாகி பேசியதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆனால் வைகோவோ, மல்லை சத்யா எனது உயிரைக் காப்பாற்றியவர். ஆகவே அவரைப் பற்றி யாரும் தவறாக பேசக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார். உடனே துரை வைகோ. 'முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு கோபமாக கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே துரை வைகோவின் ஆதரவாளர்கள் பல மாவட்டங்களில் கூட்டத்தைக் கூட்டி மல்லை சத்யாவை நீக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் வைகோ தலைமையில் கூடுகிறது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்தக் கூட்டத்தில், 'மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்’ என்று மீண்டும் துரை வைகோ ஆதரவாளர்கள் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். இதன் ஒருகட்டமாக தான் இன்று துரை வைகோ பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க துரை வைகோவின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான சத்தியகுமாரன் என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதிமுகவில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும் ஈ.வெ. ராமசாமி அண்ணாதுரை, வைகோ, துரை மட்டுமே மதிமுகவின் அடுத்த பரிணாமம் இதை ஏற்பவர்கள் இருக்கலாம் மறுப்பவர்கள் உடனே வெளியேறிச் செல்லலாம் மதிமுகவை உடைத்துவிடலாம், கட்சியில் பிளவை ஏற்படுத்தலாம். தாயகத்தை நெருங்கிவிடலாம் என நினைக்கும் துரோகிகளுக்கு சொல்கிறேன் வைகோ துரையின் கட்டளையை ஏற்காத பின்பற்றாத மதிக்காத யாராக இருந்தாலும் பெட்டியை கட்டிக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு வந்தவழியே சென்று விடுங்கள் இது துரையோட காலம் என்பதை எதிரிகளும் துரோகிகளும் உணரும் நேரம் வந்துவிட்டது' என்று மல்லை சத்யாவை மறைமுகமாக சாடியுள்ளார்.

என் விசுவாசம் வைகோவிற்கு: மல்லை சத்யா

இதற்கு பதிலடியாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லை சத்யா, 'ம.தி.மு.கவில் 32 ஆண்டுகள் அல்ல; 300 ஆண்டுகள் உழைத்தாலும் நீங்கள் எங்கள் அடிமைகளாக கைகட்டி வாய்பொத்தி இருக்க வேண்டும் என 'மாமன்னன்' திரைப்பட பாணியில் பதிவிட்டுள்ளீர்கள். மதிமுகவில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினி வேஷம், வெளியேறுங்கள் என்ற விருதுகளை எனக்கு தந்துள்ளனர்.

விளிம்பு நிலை தலைமுறையில் இருந்த என்னை குடத்தில் இட்ட விளக்காக என்னை குன்றின்மேல் வைத்து அழகு பார்த்து அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுதும் நன்றியோடு இருப்பேன் என் விசுவாசம் நம்பகத்தன்மையை வைகோ அறிவார். எனக்கு அரசியல் முகவரி தந்தது என் அன்புத் தலைவர் வைகோ ஒரு சிலர் எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் வைகோ அவர்களின் இதயத்தில் இருந்து என்னை நீக்குவதற்கு எந்த சக்தியாலும் முடியாது எனது வாழ்வின் கடைசி மணித் துளியும் வைகோ வைகோ என்றே உச்சரித்து நிறைவு பெறும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


துரை வைகோ நாளை நடைப்பெறும் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து வெளியேற்ற நிர்பந்திக்கும் வகையில் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வைகோ தன் மகனுக்காக மல்லை சத்யாவை வெளியேற்றுவாரா? அரவணைப்பாரா? என நாளை தெரிந்துவிடும்.