அரசியல்

"பிணங்களின் மீது அரசியல் செய்யாதீர்".. இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.


Minister Subramanian's response to EPS
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுவதாகக் குற்றம்சாட்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பழனிசாமியின் பேச்சு 'அரசியல் அநாகரிகம்' என்றும் அவர் சாடியுள்ளார்.

பாதுகாப்புக் குறைபாடுகளுக்குப் பதிலடி

தமிழகமே துயரத்தில் இருக்கும்போது பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் அதிலும் அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பழனிசாமியின் 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை' என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தார்.

"முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்த பிறகே, காவல்துறை கூடுதல் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்தது. ஆனால், தவெகவினர் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டனர். நீதிமன்றத்தில், 'கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படிச் சொல்ல முடியும்?' எனக் கேள்வி எழுப்பப்பட்டது. விஜய் பிரசாரத்திற்கு வருபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அரசு எப்படியெல்லாம் முயன்றது என இதில் இருந்தே பழனிசாமி தெரிந்து கொள்ளலாம். காவல் துறை விதித்த நிபந்தனைகள் எதனையும் தவெக கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது," என்று அவர் கூறினார்.

ஆம்புலன்ஸ் விவகாரத்தில் பழனிசாமியின் பங்கு

அதிமுக ஆட்சியின்போது ஆம்புலன்ஸ் தாக்கப்பட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய சம்பவத்திற்கும் பழனிசாமியே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"சாலைகளில் பிரசார வேனில் நடக்கும் கூட்டங்களில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்த வரலாறு இல்லை. 'ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார்’ எனப் பழனிசாமி சொன்ன பிறகுதான் அவருடைய கூட்டங்களில் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் தாக்கப்பட்டன. தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் வந்தபோது அதை அனுமதிக்க மறுத்து, தாக்குதல் நடத்தினார்கள் தவெக தொண்டர்கள். தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய பழனிசாமியும் தார்மீக பொறுப்பேற்க வேண்டியவர்தான்," என்று அவர் தெரிவித்தார்.

முதல்வர் எடுத்த துரித நடவடிக்கை

"தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த பழனிசாமியைப் போல் இல்லாமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனே களத்தில் இறங்கிச் செயல்பட்டார். அமைச்சர்களைக் கரூருக்கு அனுப்பினார்; நள்ளிரவிலும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உடன் இருக்கிறார். திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. துபாயிலிருந்து துணை முதல்வர் உதயநிதி அவசரமாகத் தமிழ்நாடு திரும்புகிறார். ஆனால், பழனிசாமியோ சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் முதல்வர் மீதும் காவல்துறை மீதும் பழி போடுகிறார்," என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல. அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் வதந்தியைப் பரப்பும் நோக்கோடு பேசுவது தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிராதது. எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனைக் கதைகளையும் பரப்பித் தனது சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.