அரசியல்

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
Edappadi Palaniswami
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தில், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக உரையாற்றினார். அப்போது, அவர் தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை

“திமுகவின் 51 மாத ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைத்திருக்கிறதா? இரவு, பகல் பாராமல் உழைக்கின்ற மக்கள் நிறைந்த பகுதி இது. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். குறிப்பாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. அது அதிமுக ஆட்சியில்தான்” என்றார்.

மேலும், “அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ. 7,300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஏழைப் பெண்களின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக, திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஒரு பவுன் தாலிக்குத் தங்கம் என 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இந்தத் திட்டங்களை எல்லாம் திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்தத் திட்டங்கள் தொடரும். அத்துடன், மணமக்களுக்குப் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும்” என்றும் உறுதியளித்தார்.

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி

“திமுக குடும்பக் கட்சி, அதிமுக மக்களுக்கான கட்சி. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆகிவிட்டது. கட்சியின் தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மகளிரணித் தலைவர் கனிமொழி. பிரதான பதவிகளை குடும்பத்தில் உள்ளவர்களே பங்குபோட்டுப் பிரித்துக்கொண்டனர். ஆனால், அதிமுகவில் அப்படியா? நான் கீழே இருந்து படிப்படியாக பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறேன். அதிமுக ஒரு ஜனநாயகம் உள்ள கட்சி” என்றார்.

துரோகம் செய்த எட்டப்பர்கள்

“அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்ற எட்டு அமைச்சர்களும் எட்டப்பர்களாக மாறி நமக்குத் துரோகம் செய்துவிட்டனர். ரகுபதி போன்றவர்கள் அதிமுகவில் இருந்ததால்தான் யாரென்று மக்களுக்குத் தெரியவந்தது. நன்றி மறப்பது நன்றன்று என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் ஐயன் சொல்லிவிட்டார். ரகுபதி போன்ற ஆட்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்று எண்ணியே அவர் சொல்லியிருக்கிறார்” என்று அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை அவர் கடுமையாக சாடினார்.

தமிழகம் போதை மாநிலமாகிவிட்டது

“அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது, கல்வித் தரம் குறைந்துவிட்டதால் 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனால், அரசுப் பள்ளிகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றார்.

“போதைப்பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் தமிழகம் போதை மாநிலமாக உருவாகிவிட்டது. மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். இதன் மூலம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை முதல்வரே ஒப்புக்கொண்டுவிட்டார்” என அவர் கூறினார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும்..

“போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றித் தரப்படும். ஏழை, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். பெண்களுக்கு தீபாவளிதோறும் சேலைகள் வழங்கப்படும். மணப்பாறை தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் கூறினார்.