அரசியல்

விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு- அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு- அன்புமணி குற்றச்சாட்டு!
Anbumani Ramadoss
தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், தி.மு.க. அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

விவசாயிகள் புறக்கணிப்பு மற்றும் டெல்டா பாதிப்பு

"தி.மு.க. அரசு விளம்பரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறுகிறார்; உணவுத்துறை அமைச்சர் ஒருபடி மேலே போய் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று தெரிவிக்கிறார். ஆனால், உண்மையில் விவசாயிகள் அனைவரும் அழுது கொண்டும், கோபமாகவும் இருக்கின்றனர். விவசாயிகளைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் முதலமைச்சர் இருக்கிறார். தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்.

தி.மு.க. அரசின் மெத்தனத்தால் தற்போது பெய்த மழைக்கே பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்களைச் சரியாகத் தூர்வாராமல் விட்டதால்தான் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. நீரில் மூழ்கிய பயிர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

நெல் கொள்முதல் சிக்கல்

தஞ்சை, திருவாரூர் உட்பட நான்கு மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லில் 40 சதவீதம் மட்டுமே இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதி 60 சதவீதம் இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை.

தற்போது கொள்முதல் செய்யுமாறு கேட்டால், நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது எனக் காரணம் காட்டி வாங்க மறுக்கின்றனர். அரசு உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் விட்டுவிட்டதால் தான் நெல் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. விளைந்த நெல் மட்டுமின்றி, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் சேதம் அடைந்துள்ளது.

நீர் மேலாண்மை மற்றும் முதலீடுகள் குறித்து விமர்சனம்

தி.மு.க. அரசு கடந்த நான்கு ஆண்டு காலத்தில் நீர்மேலாண்மை மற்றும் நீர்ப்பாசனத்திற்காக எந்தவொரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தி.மு.க. தமிழ்நாடுக்குச் செய்த முதலீடு வெறும் பொய்தான்.

தி.மு.க. எத்தனை முதலீடுகள் செய்துள்ளது என்பது தொடர்பாக நாங்கள் ஒரு புத்தகம் தயாரித்துள்ளோம். எனது நடைபயணம் முடிந்ததும் அதனை வெளியிடுவோம். மேலும், மாநிலத்தில் நடக்கும் கனிமவளக் கொள்ளை குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.