அரசியல்

“வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனின் மறைவு சமூகத்திற்குப் பேரிழப்பு!” - அண்ணாமலை இரங்கல்

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இன்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

“வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனின் மறைவு சமூகத்திற்குப் பேரிழப்பு!” - அண்ணாமலை இரங்கல்
த.வெள்ளையனின் மறைவு; அண்ணாமலை இரங்கல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76) நுரையீரல் தொற்று காரணமாக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட த.வெள்ளையனை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை 03.00 மணியளவில் உயிரிழந்தார்.

ஏற்கனவே மூளையில் ரத்தக் கசிவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து மீண்டு தேறி வந்த நிலையில், தற்போது நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. த.வெள்ளையன் வணிகர்களின் தலைவராக மட்டும் அல்லாமல், பொதுவில் மக்கள் நலன் சார்ந்து இயங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம், விவசாயம், நெசவு, குறு சிறு தொழில்கள் போன்றவற்றில், அந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார். சமீபத்தில், திருநெல்வேலியில் கடந்த மே 5-ஆம் தேதி கூட, சுதேசி பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் 31வது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருந்தார்.

இந்நிலையில் இவரது மறைவிற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது X தளத்தில், “வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். பொதுப் பிரச்சனைகளுக்காகவும், வணிகர்கள் ஒற்றுமைக்காகவும், உரிமைகளுக்காகவும், தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது திடீர் மறைவு, சமூகத்திற்குப் பேரிழப்பாகும். 

மேலும் படிக்க: ஹேமா கமிஷன் அறிக்கை தாக்கல்.. கேரளா அரசை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட்

வெள்ளையன் குடும்பத்தினருக்கும், வணிகர் சங்கப் பேரவை உறுப்பினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி !” எனப் பதிவிட்டுள்ளார்.