அரசியல்

கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

முதலமைச்சர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் ஒரு "மோசடிப் பயணம்" மற்றும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!
CM Stalin and Anbumani Ramadoss
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் ஒரு "மோசடிப் பயணம்" மற்றும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இயல்பாகவே தமிழகத்துக்கு வந்திருக்கக்கூடிய முதலீடுகளுக்கு, வெளிநாட்டுக்குச் சென்று படாடோப நாடகம் நடத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெர்மனி ஒப்பந்தங்கள் குறித்து குற்றச்சாட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியில் கையெழுத்தான ரூ.3,201 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது பதிவில், "ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் புதியவை அல்ல. அவை அனைத்தும் ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் செயல்பட்டு வருபவைதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"ரூ.2000 கோடி முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் Knorr-Bremse என்ற நிறுவனத்தின் செயற்கை அறிவுத் திறன் மையம் சென்னை கிண்டிக்கு அருகில் செயல்பட்டு வருகிறது. ரூ.1000 கோடி முதலீடு செய்யவிருக்கும் Nordex குழுமத்தின் காற்றாலை தயாரிப்பு நிறுவனம் சென்னைக்கு அருகில் பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. மூன்றாவதாக ரூ.201 கோடி முதலீடு செய்யவுள்ள ebm-papst நிறுவனத்தின் உலக திறன் மையம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடைசி இரு முதலீடுகளும் ஏற்கனவே செயல்பட்டு வரும் அமைப்புகளின் விரிவாக்கத்திற்காக செய்யப்படுபவை ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

வீண் செலவு மற்றும் மோசடிப் பயணம்

"முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ள ரூ.3,201 கோடி முதலீடுகளும் இயல்பாக வந்திருக்கக்கூடியவைதான். தமிழக அரசு நினைத்திருந்தால், அதிகாரிகளின் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்திலேயே இந்த ஒப்பந்தங்களைச் செய்திருக்க முடியும். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படை பரிவாரங்களுடன் ஜெர்மனி சென்றிருப்பதைப் பார்க்கும்போது, கொக்கை நேரடியாகப் பிடிப்பதற்குப் பதிலாக அதன் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிப்பதற்கு ஒப்பானது" என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் வீணாணவை என்றும், மக்களின் வரிப்பணத்தை அழிக்கக் கூடியவை என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஜெர்மனி பயணத்தையும் சேர்த்து இதுவரை வெளிநாடுகளுக்குச் சென்று கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடிதான் என்று குறிப்பிட்ட அவர், இது மொத்த ஒப்பந்த மதிப்பான ரூ.10.65 லட்சத்தில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே என்றார்.

"தமிழ்நாட்டுக்கான மொத்த முதலீட்டு ஒப்பந்தங்களில் 98 விழுக்காட்டைச் சென்னையில் இருந்தபடியே சாத்தியமாக்க முடியும் எனும் போது, வெறும் 2% முதலீட்டுக்காக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை என்ன என்பது குறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்" என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.