BJP MP Kangana Ranaut Controversy Comments : பாஜக எம்.பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் எம்.பி ஆவதற்கு முன்பும் சரி, அதன் பிறகும் சரி எதையாவது பேசி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். பாலிவுட்டில் யாருக்குமே மூளையே இல்லை எனக்கூறியது, விவசாயிகளை தவறாக பேசி சி.ஐ.எஸ்.எஃப் பெண் ஊழியரிடன் அடிவாங்கியது என தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளாகிறார் கங்கனா. இதுவரை இவரின் பேச்சுக்கு வெளியில் இருந்துதான் விமர்சனங்களும், கண்டனங்களும் வந்துக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது சொந்த கட்சியான பாஜகவே இவரை தற்போது வார்த்தைகளால் தாகியுள்ளது. ஏனென்றால் விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா பேசியது அப்படி.
கங்கனா கூறிய சர்ச்சை கருத்து: “எங்கள் உயர்மட்டத் தலைவர் வலுவாக இல்லாவிட்டால், வங்கதேசத்தில் நடந்தது இந்தியாவில் நடக்க நேரம் எடுத்திருக்காது. பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், பாலியல் தொல்லைகளும், கொலைகளும் நடந்தது. அதிர்ஷ்டவசமாக மத்திய அரசும் அந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது. இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வங்கதேசத்தில் நடந்ததை போலவே நீண்ட திட்டமிடல், சதி வேலை இந்த போராட்டத்ததின் பின்னணியில் இருந்தது. சீனா, அமெரிக்கா, இந்த வகையான வெளிநாட்டு சக்திகள் இங்கு வேலை செய்கின்றன” என்று மும்பையில் அளித்த பேட்டியில் ரனாவத் கூறினார் .
இவரின் இந்த கருத்தால், “விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மோடி அரசின் பிரச்சார இயந்திரம் தொடர்ந்து விவசாயிகளை அவமதிப்பதில் ஈடுபட்டு வருகிறது” என கங்கனா ரனாவத்தை சாடினார். இவரை தொடர்ந்து பலரும் பாஜகவையும், கங்கனாவையும் எதிர்த்தனர்.
இந்நிலையில், பாஜக மேல் விழும் கற்களில் இருந்து தப்பிக்க தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அக்கட்சி. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் , “விவசாயிகள் போராட்டத்தின் பின்னணி குறித்து பாஜக எம்பி கங்கனா கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல. கங்கனா ரனாவத்தின் கருத்துக்கு பாஜகவினர் கண்டனங்களை தெரிவிக்கிறது. கங்கனா ரனாவத்துக்கு, கட்சிக் கொள்கைப் பிரச்னைகள் குறித்து அறிக்கை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை. எதிர்காலத்திலும் இது போன்ற எந்த அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்று கட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி மற்றும் சமூக நல்லிணக்கக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. போலிஸிடம் சிக்கிய முக்கிய குற்றவாளி..
தொடர்ந்து எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி வரும் கங்கனா ரனாவத்தை இனி இதுபோன்ற கருத்துக்களை பேசவேண்டாம் என சொந்த கட்சியே கூறியதால் அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.