Krishnagiri Fake NCC Camp Case : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பள்ளி மாணவிகளுக்கான என்சிசி பயிற்சி நடைபெற்றது. இதற்காக, 17 மாணவிகள் பள்ளியிலே தங்கி பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியான சிவராமன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
இந்நிலையில், இரவு நேரங்களில் மாணவிகளை மிரட்டி சிவராமன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, 12 வயது சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பள்ளியில் தங்கியிருந்த 17 மாணவிகளில் 13 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பாலியல் வழக்கில் தேடப்பட்டதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த சிவராமனை தேடிவந்த நிலையில் கோவையில் பதுங்கியிருந்த சிவராமனை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட, சிவராமன் எலி மருந்து உண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் தேதி காலை உயிரிழந்தார். தான் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்த சிவராமன், கைது செய்வதற்கு முன்பே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான, என்சிசி பயிற்றுநர் என கூறிக் கொண்டிருந்த சுதாகர் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த சில நாட்களாக, புகாருக்கு உள்ளான பள்ளிக்கூடம் திறக்கப்படாமல் இருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு, இன்று திறப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.