அரசியல்

"பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி" கும்பிடு போட்ட மாஜிக்கள்..! அதிமுக-வில் மேலும் ஒரு விரிசல்...?

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாஜிக்கள் சிலர் அதிமுகவை விட்டு விலக உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


மோடியா இந்த லேடியா என்று ஜெயலலிதாவை போல் கர்ஜிக்கவில்லை என்றாலும், பாஜக கூட்டணியை வேண்டாம் என்று அசால்டாக தூக்கிப்போட்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒரு சாமி, ரெண்டு சாமி, மூன்று சாமி, நான் எடப்பாடி பழனிசாமி என்று பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசி கூட்டணியை விட்டு வெளியே வந்ததை பார்த்த அதிமுக தொண்டர்கள், “ஒரு தென்றல் புயலாக வருதே” என்று சில்லறையை சிதறவிட்டனர். ப்பா.. என்ன ஒரு நிம்மதி என்றிருந்த அதிமுகவிற்கு, மீண்டும் மீண்டும் தூது அனுப்பி எடப்பாடியின் தூக்கத்தை கெடுக்கத் தொடங்கியது பாஜக என்று கூறப்பட்ட நிலையில், மாஜிக்களின் கலகக் குரல்கள் எடப்பாடியின் ஒட்டுமொத்த நிம்மதியை குலைத்தது என்று எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தீவிரமாக ஆலோசித்த எடப்பாடியார், அதிமுக – பாஜக கூட்டணியை புதுப்பித்தார். இந்த கூட்டணி உருவானது திமுகவை கடுப்பேற்றியதோ இல்லையோ, ஆனால் அதிமுக மாஜிக்களை உச்சக்கட்ட விரக்தியில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக மாஜியான வேலுமணி பாஜகவிற்கு நெருங்கிய வட்டாரத்தில் இருப்பதாகவும், இதனால் கூட்டணி உடைந்த பிறகும் சரி, கூட்டணி உருவானதற்கு முன்பும் சரி பாஜக குறித்து வாய் திறக்காமல் இருந்தாக கூறப்படுகிறது. ஆனால், அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்பதுபோல, அதிமுக – பாஜக கூட்டணி உடைந்ததில் இருந்து பாஜகவை வெளுத்து வாங்கி வருபவர் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார். குமாரு.. கொக்கி குமாரு என்று மாஸாக வலம் வந்து, பாஜகவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து வந்த ஜெயகுமாருக்கு மீண்டும் அதிமுக – பாஜக உருவானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், அவர் அதிமுக தலைமை மீது கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதன் வெளிப்பாடாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்காமல் புறக்கணித்தார். அப்போது பேசிய அவர், கட்சியில் இருந்து விலகுவதாக வெளியான செய்தி குறித்தும், கட்சியில் அடுத்தக்கட்டமாக செய்யப்போகும் நடவடிக்கை குறித்தும் பேசினார்.

அதாவது, “எங்கள் குடும்பம்- திராவிட குடும்பம்.. என்னுடைய அப்பாவை பேரறிஞர் அண்ணாதான் அடையாளம் காட்டி, மாநகராட்சி கவுன்சிலராக்கி நிலைக்குழு தலைவராக்கினார். நீண்ட நெடிய ஒரு திராவிட பாரம்பரிய குடும்பம்; தன்மானத்துடன் வாழ்ந்த குடும்பம்; பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்துக்கே இல்லை. ஆகையால் தன்மானத்துடன் இருக்கிறவர்கள் நாங்கள். எனக்கு அண்ணா திமுக அடையாளம் காட்டியது; அந்தஸ்தை கொடுத்தது. எனக்கு அடையாளம் தந்தது எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்தான். எனவே வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எங்களுடைய பயணம் தொடரும். எனவே பொய்ச்செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “யார் வீட்டு வாசலிலும் பதவிக்காக நின்றவன் இந்த ஜெயக்குமார் இல்லை. பதவி என்பது தோளில் போட்டுள்ள துண்டு என்றார் அண்ணா. என்னைப் பொறுத்தவரை ஒரு கர்ச்சீப். அதற்காக இந்த இயக்கம் இல்லை. உயிர் மூச்சு என்று இருந்தால் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில்தான் இருப்பேன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

யார் வீட்டு வாசலிலும் நின்றதில்லை.. நின்றதில்லை என்று கூறிய ஜெயக்குமார், தங்கள் குடும்பம் தன்மானத்துடன் வாழ்ந்த குடும்பம் என்று கூறியதோடு, அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவே இல்லை. எனவே, ஜெயக்குமார் மறைமுகமாக எடப்பாடியைத் தான் சாடுகிறாரோ? தன்மானத்துடன் வாழ்ந்த குடும்பம் என்பதால், தன்மானத்தைவிட்டு அதிமுகவில் அவர் பயணிக்க வாய்ப்புகளே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஒருபக்கம், ஜெயக்குமார் வெளிப்படையாகவே தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேட்டபோது, ‘பொதுச்செயலாளர்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறி, கை எடுத்து கும்பிட்டவாறு சென்றுள்ளார் செங்கோட்டையன்.

அதிமுக-பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பல்வேறு நிபந்தனைகள் வைத்ததால், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வைத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையன் தலைமையில் ஒரு அணியை உருவாக்கி கூட்டணி அமைக்க திட்டமிட்ட டெல்லி தலைமை, இதற்காக செங்கோட்டையனை அவ்வப்போது டெல்லிக்கு அழைத்து பேசியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கோபி அருகே கொடிவேரியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செங்கோட்டையனிடம் அதிமுக-பாஜ கூட்டணி குறித்து கேட்டபோது, ‘பொதுச்செயலாளர்…’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறினார். தொடர்ந்து, கேட்கப்பட்ட மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த அவர், கையெடுத்து கும்பிட்டவாறு அங்கிருந்து வெளியேறினார்.

அதிமுக – பாஜக கூட்டணி உருவானதையடுத்து அதிமுக மாஜிக்கள் எந்தவிதமான ஆதரவான கருத்தும் சொல்லாமல் புறக்கணிப்பதால், ஜெயக்குமார் தலைமையில் ஒரு அணி உருவாகவும் வாய்ப்புகள் உள்ளதாக உட்கட்சி விவரம் அறிந்தவர்கள் றுகின்றனர். எனவே, அதிமுக மாஜிக்களின் அடுத்தடுத்த ஆக்ஷன்கள் என்னென்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.