அரசியல்

"ஒரு யூனிட் ரூ. 9.50-க்கா?"- திமுக அரசின் மின்சாரக் கொள்முதல் திட்டத்திற்கு அன்புமணி கண்டனம்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கத் திட்டமிட்டுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Anbumani Ramadoss
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கத் திட்டமிட்டுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'ஒரு யூனிட் ரூ.9.50 - இழப்பை ஏற்படுத்தும்'

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மாலை நேர மின் தேவையை சமாளிப்பதற்காக 1553 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாகவும், அந்த அளவு மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.8.50 முதல் ரூ.9.50 வரை விலை கொடுத்து வாங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது. இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும்.

'புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை'

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறையவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியமே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி மாநிலத்தின் மொத்த மின் தேவையில் வெறும் 16% மட்டுமே மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரே ஒரு மெகாவாட் அளவுக்கு கூட புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

'ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது'

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவை 13,860 கோடி யூனிட் எனும் நிலையில், அதில் 80.66 விழுக்காடான 11 ஆயிரத்து 179 கோடி யூனிட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பு, தனியார் மின் நிறுவனங்கள், மின்சார சந்தைகள் ஆகியவற்றிடம் இருந்து தான் மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது. இவ்வாறு வாங்குவதற்காகவே மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்திய பிறகும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. காரணம்.... தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவது தான். மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது. சந்தை சராசரி விலையைக் கணக்கிட்டு, அதற்கும் குறைவான விலையிலேயே 1553 மெகாவாட் மின்சாரத்தையும் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் ஆணையிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.