கொல்கத்தா: கடந்த மாதம் 30ம் தேதி கொல்கத்தாவில் உள்ள RG Kar மருத்துவமனையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கியமாக இந்தப் போராட்டத்தால் மேற்குவங்க மாநிலமே போர்க் களமாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில், மர்ம கும்பல் ஒன்று போராட்டகாரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது. அதேபோல் RG Kar மருத்துவமனை, மாணவிகளின் தங்கும் விடுதி ஆகியவற்றையும் அவர்கள் சூறையாடினர். இதனால் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டே செல்கிறது. அதேநேரம் பெண் மருத்துவர் கொலை வழக்கில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் எனக்கூறி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திலும் பாஜக ஈடுபட்டது.
மாநில செயலகத்தை நோக்கி 'நபன்னா அபிஜன்' [Nabanna Abhijan] என்ற பெயரில் இந்த பேரணி நடைபெற்றது. பாஜகவினர் தடுப்புகளை உடைத்தும் அனுமதியை மீறியும் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீஸார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆனால், காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியும் வெடிகுண்டை பயன்படுத்தியதாகவும் பாஜக குற்றம்சாட்டியது. இதனையடுத்து மேற்குவங்க அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, 12 மணி நேர மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டமான ‘Bengal Bandh'-க்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின், மாணவர் பிரிவின் நிறுவன தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பாலியல் கொலையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, மாணவர் பிரிவின் நிறுவன தினத்தை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். அதேபோல், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க மசோதா நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க - பெண் மருத்துவர் பாலியல் படுகொலைக்கு மம்தா வருத்தம்
10 நாட்களுக்குள் சட்டப்பேரவையை கூட்டி, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க மசோதா நிறைவேற்றப்படும் எனவும், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், ராஜ்பவன் வெளியே போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வன்முறையை நிலைநாட்டவே பந்த்தை அறிவித்து, அதற்காக வெளிமாநில ஆட்களை பாஜக அழைத்து வந்ததாகவும் மம்தா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.