இந்தியா

Wayanad: வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 120ஆக உயர்வு... சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள்!

Wayanad Landslide Latest Update News Tamil : கேரள மாநிலம் வயநாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் பயங்கர நிலச்சரி ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Wayanad: வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 120ஆக உயர்வு... சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள்!
வயநாடு நிலச்சரிவில் 120க்கும் மேற்பட்டோர் பலி

Wayanad Landslide Latest Update News Tamil : கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவத்தினர் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வயநாட்டில் பெய்த அதிகனமழையால் சூரல்மலை, அட்டமலை, முண்டக்கை, நூல்புழா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியதாகவும் அஞ்சப்படுகிறது. இதனையடுத்து துரிதமாக மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில், 120 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 100க்கும் மேற்பட்டவர்களை காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் விமானப் படையும், இந்திய ராணுவமும் மீட்புப் பணிகளில் களமிறங்கியுள்ளன. கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்நிலையில் சாலியாற்றில் சடலங்கள் மிதந்து வருவதாகவும், சூரல்மலா கிராமத்தில் 200 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரல்மலை - முண்டக்கையை இணைக்கும் ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே கயிறுகள் மூலமாக பாதிக்கப்பட்டோரை மீட்க இந்திய ராணுவம் முயற்சித்து வருகிறது.

அதேநேரம் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், NDRF குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், மலையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி குமுளி, மூணார், வயநாடு என 8-க்கும் மேற்பட்ட மலைப்பகுதிகளில் திங்கட்கிழமை இரவு நேரங்களில் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் வயநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக கனமழை பெய்து நிலச்சரிவுக்கு வித்திட்டுள்ளது. 

கனமழைக்கு இடையே நிம்மதியாக ஆயிரக்கணக்கான மக்கள் உறங்கிக்கொண்டிருக்க, அப்போது தான் அந்த பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், என்ன நடக்கிறது என மக்கள் புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே பெரும்துயரம் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான உயிர்களை இயற்கை மண்ணுக்குள் இழுத்துச்சென்றது. நிலச்சரிவின் கோரப்பிடியில் சிக்கிய முண்டகக்கை சிறு நகரத்தின் 2 வார்டுகளில், மொத்தம் 3,000 பேர் வசித்ததாக கல்பேட்டா எம்.எல்.ஏ. சித்திக் தெரிவித்துள்ளார். கோவை, உதகை என தமிழ்நாடு சார்பில் மீட்பு குழுக்கள், விமானப்படை விமானங்கள் என அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் நிலையில், இன்னும் எத்தனை பேர் மண்ணுக்குள் சிக்கியுள்ளனர் என்பது மீட்புக்கு பின்னரே தெரியவரும். 

2020ஆம் ஆண்டு மூணாறு அருகேயுள்ள பெட்டிமுடி நிலச்சரிவு, 2001ஆம் ஆண்டு அம்பூரி நிலச்சரிவு, 2018 பெருவெள்ளம் என கேரள வரலாறு பல எண்ணில் அடங்காத பேரிழிப்புகளை சந்தித்துள்ளது. இது அணைத்திலும் கண்டிறாத பெரும் சோகத்தை கேரளா தற்போது சந்தித்து வருகிறது. எனினும் இதிலிருந்து கேரளம் மீளும் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருவதுடன், உதவிக்கரமும் நீட்டியுள்ளனர். இந்த பேரிடர் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மிகக் கடுமையான மழையால் ஒரு பகுதியே அழிக்கப்பட்டு விட்டது எனவும், 118 முகாம்களில் 5,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கப்பற்படை, இந்திய ராணுவம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் மோடி, ராகுல்காந்தி உரிய உதவிகளை அளிப்பதாக உறுதியளித்துள்ளனர் எனவும், தூய்மைப் பணியாளர்கள் விடுமுறையில் இருந்து திரும்ப உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நேசத்திற்குரியோரின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என தெரிவித்துள்ள அவர், வயநாடு மீட்புக்கும், மறு சீரமைப்புக்கும் கூடுதல் உதவிகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார். தமிழக, சிக்கிம் முதலமைச்சர்கள் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு தங்கள் உதவிகளை பிறரும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். துக்கம் அனுசரிக்கப்படும் இரு நாட்களில், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வரலாறு காணாத பேரிழப்பை கேரளா சந்தித்துள்ள சூழலில், சகோதர மாநிலத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இதனிடையே வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் தாலுகா, புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ், வயநாட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில், பாட்டி வீட்டில் தங்கியவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதேபோல, பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லை பகுதியைச் சேர்ந்த கல்யாணகுமார் என்பவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவர் வயநாடு சூரமலை பகுதியில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க - வயநாடு நிலச்சரிவு... தவெக தலைவர் விஜய் இரங்கல்

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ, நிதியை மத்தியஅரசு அளிக்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். அத்துடன், மத்திய அரசு கேரளாவுக்கு 5,000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்நிலையில், நாளை (ஜூலை 31) ராகுல்காந்தியும் பிரியங்கா காந்தியும் வயநாடு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். இதனிடையே நிலச்சரிவு சம்பவத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முழுமையாக முடிந்த பின்னர் மத்திய அரசு நிதியுதவி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்னொரு பக்கம், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், எட்டினஹள்ளி அருகே நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக, மங்களூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷிராடி காட் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏட்டினஹள்ளியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதில் கார், லாரி, எரிவாயு டேங்கர் லாரி ஆகிய வாகனங்கள் பாதிக்கப்பட்டன. அதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பல கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் புத்தூர் - சம்பாஜே வீதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.