இந்தியா

மும்மொழிக் கொள்கை: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி (NEP) பாடத்திட்டத்திலும் தேர்வு முறையிலும் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.

மும்மொழிக் கொள்கை: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு!
CBSE
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி (NEP) பாடத்திட்டத்திலும் தேர்வு முறையிலும் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.

புதிய தேசியக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும் விதமாக, வரும் 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட உள்ளது. மாணவர்கள் பயிலும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பதை சிபிஎஸ்இ உறுதி செய்துள்ளது. பாடப்புத்தகங்களுக்காகக் காத்திருக்காமல், அடுத்த ஒரு வாரத்திற்குள் இக்கொள்கையைச் செயல்படுத்தத் தொடங்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக 2030-31 கல்வியாண்டுக்குள் 10-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய தேர்வு முறை

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், 9-ஆம் வகுப்பு முதல் இருநிலை தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, அனைத்து மாணவர்களும் 80 மதிப்பெண்களுக்கான பொதுவான 'தரநிலை' தேர்வை எழுதுவது கட்டாயம். கூடுதல் திறன் பெற விரும்பும் மாணவர்கள் 'மேம்பட்ட நிலை' தேர்வை விருப்பத்தேர்வாக எழுதலாம். இதில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களின் சான்றிதழில் 'மேம்பட்ட நிலைத் தகுதி' எனக் குறிப்பிடப்படும். இருப்பினும், இந்த மதிப்பெண்கள் ஒட்டுமொத்தத் தொகுப்பு மதிப்பெண்களுடன் சேர்க்கப்படாது.

விதிவிலக்கு மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

வெளிநாடுகளில் படித்துவிட்டுத் திரும்பும் மாணவர்களுக்கு, அவர்கள் படித்த மூன்றாவது மொழி உள்நாட்டுப் பள்ளிகளில் இல்லாத பட்சத்தில் சில நிபந்தனைகளுடன் விலக்கு அளிக்கப்படலாம். இந்த புதிய கல்வித் திட்டத்தின் கீழ், 10-ஆம் வகுப்புக்கான முதல் பொதுத் தேர்வுகள் 2028-ஆம் கல்வியாண்டில் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.