இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைபேட்டையை சேர்ந்த ஒரு படகையும், அதிலிருந்து 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்து மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இலங்கை கடற்படையால் தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது அங்கு வரும் இலங்கை கடற்படையினர் மீனவர்களை துன்புறுத்துவதோடு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. மேலும் சில சமயங்களில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்குவதும், அவர்களின் வலைகளை பறித்து அனுப்புவதும், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்துகின்றனர். மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். ஆனால், மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை மட்டும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில்தான் தற்போது நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிலம்பு செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், குணா, மேகநாதன், வளர்ச்செல்வன், சாமுவேல், ரகு கார்த்தி உள்ளிட்ட மொத்தம் 12 மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மின் பிடித்ததாகக் கூறி, அவர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின் அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களையும் படகையும் மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.