இந்தியா

கணவருடன் சண்டை.. வீட்டிலிருந்து வெளியேறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் சண்டை.. வீட்டிலிருந்து வெளியேறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!
வீட்டிலிருந்து வெளியேறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
அரியானா மாநிலம், பானிப்பட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடந்த 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில், இரு நாட்கள் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் அவரது கணவர் கடந்த 26 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரை அளித்துள்ளார்.

இதற்கு முன்பு தனது மனைவி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், ஆனாலும் அவரே மீண்டும் வீடு திரும்பிவிடுவார் என அவரது கணவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணையில், அந்த பெண் சோனிபட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கால் துண்டான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதனைதொடந்து போலீசார் அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அங்கு சென்ற போலீசாரிடம் அந்த பெண் கொடுத்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து வீட்டை விட்டு வெளியேறி தான் அருகிலுள்ள ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, தனது கணவரால் அனுப்பப்பட்டதாக கூறி ஒரு நபர் தன்னை அணுகியதாகத் தெரிவித்தார்.

மேலும் அந்த நபர், தன்னுடன் அழைத்துச் சென்று, நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் காலியான பெட்டி ஒன்றில் ஏறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் மேலும் இரண்டு ஆண்கள் அவருடன் சேர்ந்து தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் தான் சோனிபட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் தன்னை ரயில் தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததாகவும், அப்போது அவ்வழியாக வந்த ஒரு ரயில் தனது கால் மீது ஏறியதில் ஒரு காலை இழந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து கடந்த 6 ஆம் தேதி வழக்கு பதிவு செய்த போலீசார், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.