இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்.. கேள்விக்குள்ளாகும் கருத்துரிமை?

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்.. கேள்விக்குள்ளாகும் கருத்துரிமை?
Ashoka University Professor Ali Khan Mahmudabad arrest over post on Operation Sindoor
ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும், அரசியல் அறிவியல் (political science) துறைத் தலைவருமான மஹ்முதாபாத், சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த தனது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் மே 7 ஆம் தேதியன்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு ஹரியானா பாஜக தரப்பினர் மத்தியில் கொதிப்பை உண்டாக்கியது. ஹரியானாவின் பாஜக இளைஞர் மோர்ச்சா தலைவருமான யோகேஷ் ஜாதேரி மற்றும் ஹரியானா மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா ஆகியோர் இணைப் பேராசிரியர் மஹ்முதாபாத் மீது புகார் கொடுத்தனர்.

சம்மன் அனுப்பிய மகளிர் ஆணையம்:

மே 12 அன்று ஹரியானா மாநில மகளிர் ஆணையம் மஹ்முதாபாத்திற்கு சம்மன் அனுப்பியது. அதில், ”கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் உள்ளிட்ட சீருடையில் உள்ள பெண்களை இழிவுபடுத்துவது போல் மஹ்முதாபாத் கருத்துக்கள் அமைந்துள்ளதாகவும், இந்திய அரசாங்கத்திற்கு தீங்கிழைக்கும் நோக்கத்தை உள்ளடக்கியதாகவும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தது”.

சம்மனுக்கு விளக்கமளித்த மஹ்முதாபாத், எனது கருத்துக்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என குறிப்பிட்டு இருந்தார்.

கைது செய்யப்பட்ட பேராசிரியர்:

இதனிடையே, டெல்லியிலிருந்த அசோகா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ராய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்ஐஆர்களின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணை:

கைது நடவடிக்கையினைத் தொடர்ந்து இணைப் பேராசிரியர் மஹ்முதாபாத் உச்சநீதிமன்றத்தை நாடினார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், மஹ்முதாபாத் கைது தொடர்பாக அவசர விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்த மஹ்முதாபாத் கருத்துக்கள், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்ததாக அரசுத் தரப்பு அவர் மீது குற்றம் சாட்டியது. மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது என வாதடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை மே 20 அல்லது 21 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோரும் இந்தக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். பாஜகவினர் வைத்த குற்றச்சாட்டுக்காக தான், பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார் என எதிர்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் மஹ்முதாபாத் பதிவிட்டது என்ன?

அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட பதிவின் விவரம் பின்வருமாறு- ”பாகிஸ்தானில் இராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு குறைந்து வருகிறது. எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் ஒரு மரபுரீதியான இராணுவப் பதிலடி இருக்கும். இதன் விளைவாக, பாகிஸ்தான் இராணுவம் இனி பயங்கரவாதிகள் பின்னால் ஒளிந்துகொள்ள முடியாது. நீண்ட காலமாக, பாகிஸ்தான் இராணுவம் அமைதியினை சீர்குலைக்க ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை பயன்படுத்தி வந்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச அரங்கில் தாங்களே பாதிக்கப்பட்டவர்கள் போல காட்டிக்கொள்கிறது. ஆபரேஷன் சிந்துர், இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் பற்றிய இதுவரை இருந்த கருத்துகளை மாற்றியமைத்துள்ளது. உங்கள் பயங்கரவாதப் பிரச்சினையை நீங்கள் கையாளாவிட்டால், நாங்கள் கையாள்வோம் என சிந்தூர் ஆபரேஷன் மூலம் இந்தியா தெளிவுப்படுத்தியுள்ளது.

Image
போரைப் பற்றி சிந்தனையின்றி வாதிடுபவர்கள் ஒருபோதும் போரைப் பார்த்ததில்லை, போர்ப்பகுதிகளில் வாழ்ந்ததும் இல்லை, சென்றதும் இல்லை. ஒரு போலி சிவில் பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்பது உங்களை ஒருபோதும் வீரனாக மாற்றாது. மோதல்களால் ஏற்படும் இழப்புகளின் வலியை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். போர் கொடூரமானது. ஏழைகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அரசியல்வாதிகளும் பாதுகாப்பு நிறுவனங்களுமே போரினால் பயனடைகிறார்கள்.

இறுதியாக, கர்னல் சோபியா குரேஷியைப் பல வலதுசாரி ஆதரவாளர்கள் பாராட்டுவதைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், கும்பல் படுகொலைகள், புல்டோசர் மூலம் இடிப்பு மற்றும் பாஜகவின் வெறுப்பு குறித்து பேசியதால் பாதிக்கப்பட்டவர்கள்.. இந்திய குடிமக்களாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் ஏன் உரக்கக் குரல் எழுப்பக்கூடாது? என்னைப் பொறுத்தவரை பத்திரிக்கையாளர் சந்திப்பு, வெறும் கண்துடைப்பு, பாசாங்கு செய்வது போல் இருந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.