இந்தியா

தேர்தல் ஆணையத்துக்கு சரமாரி கேள்வி.. நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட அதிரடி உத்தரவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு சரமாரி கேள்வி.. நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட அதிரடி உத்தரவு!
Supreme Court Orders Election Commission to Digitally Publish Details of 65 Lakh Deleted Voters in Bihar
243 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைப்பெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ”Special Intensive Revision (SIR)” என்கிற பெயரில் வீடு வீடாக சென்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஜூன் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆரம்பம் முதலே ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன் விவரங்களை வெளியிடுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதனால் எதிர்கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எழுப்பிய கேள்வி:

இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவுகளை தற்போது பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் அமர்வு, "இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டவர்களின் பெயர்களை ஏன் வெளியிட முடியாது" என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது.

மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அத்தகைய பட்டியல் வழங்கப்பட்டுள்ளன, என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

”இந்தப் பெயர்களை ஏன் ஒரு காட்சிப் பலகையிலோ அல்லது வலைத்தளத்திலோ பதிவேற்ற முடியாது?, குடிமக்கள் அரசியல் கட்சியை ஏன் சார்ந்திருக்க வேண்டும்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதன்பின், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை டிஜிட்டல் வடிவத்தில் பகிர்ந்துக் கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு:

இதனைத் தொடர்ந்து, “நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலையும், அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களையும் செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும்” உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

”நீக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி, தனது அலுவலகத்தில் காட்சிப்படுத்த வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரி இதை தங்கள் சமூக ஊடக வலைத்தளத்திலும் பகிர வேண்டும். கூடுதலாக, 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அதிகாரியும் அந்தந்த அலுவலகங்களிலும், தொகுதி மேம்பாட்டு/பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அறிவிப்புப் பலகையில் வருகிற செவ்வாய்கிழமைக்குள் காட்சிப்படுத்த வேண்டும்” எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில், தங்களது பெயர் நீக்கப்பட்டிருந்தால் வாக்காளர்கள் தங்கள் ஆதார் அட்டையினை கூட பயன்படுத்தி மேல்முறையீட்டு கோரிக்கை மனுவினை சமர்ப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக, ஆதார் அட்டையினை அடையாள ஆவணமாக கருத முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.