இந்தியா

பரபரப்பான சந்தையில் துப்பாக்கிச் சூடு.. கணவன் - மனைவி தகராறில் விபரீதம்!

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தை பகுதியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பரபரப்பான சந்தையில் துப்பாக்கிச் சூடு.. கணவன் - மனைவி தகராறில் விபரீதம்!
Shootout in a busy market
உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தை பகுதியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

கோரக்பூரைச் சேர்ந்த விஸ்வகர்மா சவுகான் என்பவருக்கும், அவரது மனைவி மம்தா என்கிற முக்தி சவுகானுக்கும் (30), கடந்த பத்து ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். மம்தா பேங்க் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததுடன், அவர்களுக்கு 13 வயது மகள் ஒருவரும் உள்ளார். கணவன் - மனைவி இவருக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

துப்பாக்கியால் சுட்டுக்கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்.3) இரவு 8 மணியளவில், மம்தா புகைப்படங்கள் எடுப்பதற்காக ஒரு ஸ்டுடியோவிற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த விஸ்வகர்மா, மம்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், கோபமடைந்த விஸ்வகர்மா, தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து மம்தாவின் மார்பில் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மம்தாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

அங்கு மம்தாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய விஸ்வகர்மாவை போலீசார் தீவிரமாக தேடினர். இதைத்தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே அவரைப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இடத்தில் மனைவி மீது கணவன் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.