இந்தியா

தாலி கட்டிய 15 நிமிடத்தில் மாப்பிள்ளைக்கு மாரடைப்பு.. களையிழந்த திருமண நிகழ்வு

மணமகள் கழுத்தில் தாலி கட்டிய 15 நிமிடத்திற்குள் மணமகன் மாரடைப்பால் இறந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாலி கட்டிய 15 நிமிடத்தில் மாப்பிள்ளைக்கு மாரடைப்பு.. களையிழந்த திருமண நிகழ்வு
Groom Dies 15 Minutes After Marriage Due To Heart Attack
கடந்த சில வருடங்களாகவே வயது வித்தியாசமின்றி திடீர் மாரடைப்பால் மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் தாலி கட்டிய சிறிது நேரத்தில் மணமகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஜோடிகளை வாழ்ந்த குவிந்த உறவினர்கள், எதிர்பாரா விதமாக நடைப்பெற்ற சம்பவத்தினை தொடர்ந்து கதறி அழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகிய நிலையில் காண்போரின் மனதை உலுக்குகிறது.

நேற்றைய தினம் (சனிக்கிழமை) கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கண்டி என்ற ஊரிலுள்ள நந்திகேஷ்வர் கல்யாண மண்டபத்தில் தான் இந்த துயர சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கும்பரேஹள்ளி கிராமத்தில் வசிக்கும் மணமகன் பிரவீன் குர்னே (26), பெலகாவி மாவட்டம் அதானி தாலுகாவில் உள்ள பார்த்தனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை நேற்றைய தினம் மணம் முடித்தார். மணப்பெண், பிரவீன் குர்னேவின் தாய்மாமா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருண்டு போன திருமண நிகழ்வு:

திருமண நிகழ்வால், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நந்திகேஷ்வர் கல்யாண மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் மத்தியில் புன்னகை வீசியது. ஆனால், அது நீடிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. புதுமணத் தம்பதியினரை ஆசீர்வதிக்க உறவினர்களும் விருந்தினர்களும் திருமண மேடையேற காத்திருந்த சமயம், மணமகன் பிரவீன் உடல் நடுக்கத்தோடு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். திடீரென்று மொத்தமாக நிலைக்குலைந்து திருமண மேடையிலேயே சரிந்து விழுந்தார்.

அதிர்ச்சியும், பீதியும் அடைந்த உறவினர்கள் உடனே, பீரவீனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பீரவினை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூற, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தனர். திருமணம் ஆன 15 நிமிடங்களில், மணமகள் விதவையானாள். தம்பதியினரை வாழ்த்த வந்த விருந்தினர்கள் மணமகன் உடலை கண்டு கதறி அழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உலுக்கியது. கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த விழா மண்டபம் இருண்டு போனது.

"கனவிலும் இப்படி யாருக்கும் நடக்கக்கூடாது. இந்த ஜோடி நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வாழ்த்துவதற்காக நாங்கள் ஒன்று கூடினோம். ஆனால் இப்போது ஒரு இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்," என்று கண்ணீர் மல்க திருமண நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர் ஒருவர் கூறினார்.



கர்நாடக சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் மாநில செயலாளராக இருக்கும் ஸ்ரீஷைல் குர்னேவின் மூத்த மகன் பிரவீன் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.