இந்தியா

பள்ளி மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை.. ஆசிரியைக் கைது

மாணவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த பெண் ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை.. ஆசிரியைக் கைது
School student sexually assaulted
மும்பையில் செயல்பட்டு வரும் பிரபல பள்ளி ஒன்றில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர், அவரது வகுப்பில் பயின்ற ஆண் மாணவரை கடந்த ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் பாடம் நடத்தும் அந்த ஆசிரியைக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். 2023 டிசம்பரில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவிற்காக நடனக் குழுக்களை ஒருங்கிணைத்தபோது மாணவனுக்கும் ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆசிரியைக்கு மாணவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், ஜனவரி 2024 முதல் மாணவனை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

தெற்கு மும்பை மற்றும் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள 5 நட்சத்திர விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு மாணவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மாணவனை அடிக்கடி மது அருந்த வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவன் மன அழுத்தத்தில் இருக்கும்போது அதனை கட்டுப்படுத்தும் சில மருந்துகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடங்கிய பல மாதங்களுக்குப் பிறகு, மாணவரின் குடும்பத்தினர் அவரது நடத்தையில் ஒரு மாற்றத்தைக் கவனித்து, அது குறித்து அவரிடம் பேசினர். அப்போது அவர் பாலியல் துன்புறுத்தல் குறித்து அவர்களுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பள்ளிப் படிப்பை முடிக்க இன்னும் சில மாதங்களே உள்ளதால், ஆசிரியை அவரைத் தனியாக விட்டுவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாக இருந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த மாணவன் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டுப் பணியாளரை மாணவனின் வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியை, அவரை சந்திப்பதற்காக அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

ஆனால், சந்திப்புக்கு மறுத்த மாணவன், தனது பெற்றோரிடம் இதனை கூறியுள்ளார். பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போக்சோ வழக்கில் பெண் ஆசிரியை கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, காவல்துறை விசாரணையில், ஆசிரியையின் தோழியும் அவருக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. ஆரம்ப கட்டத்தில் ஆசிரியையுடன் பாலியல் உறவில் ஈடுபட மறுப்பு தெரிவித்த மாணவனை கட்டாயப்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மேலும், ஆசிரியையின் தோழி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மும்பை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.