இந்தியா

மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் ராணுவம்!

பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் திறந்துள்ளது.

மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் ராணுவம்!
மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் ராணுவம்!
கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் எதிரொலியாக 48 சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்தியது தீவிரவாதி ஹாசிம் மூஸா என்பதும், அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் அடுத்த ஒன்றரை நாட்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பேட்டியளித்தார். தொடர்ந்து தெற்கு காஷ்மீரின் பாரக்வால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

தீவிரவாத தாக்குதல் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும் எனவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து மத்திய அரசால் பாகிஸ்தான் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு, பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது. இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு பாகிஸ்தான் அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.

அதன்படி கடந்த 6 நாட்களில் 55 தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் துணை ஊழியர்கள் உள்பட பாகிஸ்தானியர்கள் 786 பேர் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில், இந்தியர்களை திருமணம் செய்து, பல்லாண்டுகளாக இங்கு வசிப்பவர்களும் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது.

இந்திய அரசிடம் பலரும் கோரிக்கை விடுத்தல் நிலையில், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிய குடிமக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. அட்டாரி எல்லை வழியாக அவர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப அனுமதி அளித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வியாழக்கிழமை, காலை 8 மணிக்கு பாகிஸ்தான் எல்லையை மூடியது. இதனால் பாகிஸ்தானியர்கள் வெளியேற முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்தனர். பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்களை ஏற்க மறுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் 24 மணி நேரத்திற்கு பிறகு பாகிஸ்தான் தற்போது தங்கள் எல்லையை மீண்டும் திறந்துள்ளது.