Indian Army Build Bridge in Wayanad Landslide Area : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஒரு வாரமாக இடைவிடாமல் கொட்டிய பேய் மழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள்,சிறு சிறு வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன.
வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே மண்ணில் புதையுண்டு பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதேபோல் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 295 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தோண்டத் தோண்ட சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் கேரள மாநிலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுதவிர சாலியாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் பல கிமீ தூரத்தில் இருந்து மீட்கப்படுகின்றன. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு மத்தியிலும் மீட்பு பணி நடந்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக முண்டகை-சூரல்மலை இடையேயான பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதால் மறுபக்கம் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.
கட்டடங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதைந்து கிடப்பதால் அதற்குள் சிக்கி இருப்பவர்களை ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட கருவிகள் மூலம் நிலத்தை தோண்டிதான் மீட்க முடியும். ஆனால் பாலம் அடித்து செல்லப்பட்டதால் ஜேசிபி இயந்திர வாகனம் உள்பட மீட்பு பணிக்கு தேவையான கருவிகளை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் முண்டகை-சூரல்மலை இடையே இரும்பு பாலம் அமைக்க ராணுவ வீரர்கள் முடிவு செய்தனர்.
பாலம் அமைப்பதற்கு தேவையான இரும்புகள் ராணுவ வாகனங்களில் அங்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு இரும்பு பாலம் அமைக்கும் பணியை 'மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப்' பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் தொடங்கினார்கள். ஒருபக்கம் மீட்பு பணி துரிதமாக நடந்த நிலையில், மறுபக்கம் பாலம் அமைக்கும் பணியும் இரவு, பகலாக நடந்தது.
இந்நிலையில், ராணுவ வீரர்களின் ஓயாத உழைப்பு காரணமாக இன்று மாலை 5.30 மணிக்கு அதாவது 16 மணி நேரத்தில் 190 அடி நீள இரும்பு பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 24 டன் எடையை தாங்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டிமுடிக்கப்பட்டபிறகு ராணுவ வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இதன்பிறகு அந்த பாலம் வழியாக வாகனங்கள் மூலம் மீட்பு பணிக்கு தேவையான கருவிகள் கொண்டு செல்லப்பட்டு, மண்ணுக்குள் புதையுண்ட மக்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தங்களின் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.