இந்தியா

தலைமை நீதிபதி மீது காலணி வீச முயற்சி: கடவுள் சொல்லித்தான் செய்தேன்- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்காக வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி மீது காலணி வீச முயற்சி: கடவுள் சொல்லித்தான் செய்தேன்- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்
Advocate Rakesh Kishore
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்காகச் சிறிதும் வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (அக். 6) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு கூடியிருந்தபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியைக் கழற்றி நீதிபதியை நோக்கி வீச முயன்றார். அந்தக் காலணி நீதிபதியின் மீது படாமல் மேடைக்கு முன் விழுந்தது. உடனே அவரைக் காவலாளிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக் குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், இந்தியப் பார் கவுன்சில் உடனடியாக அவரை இடைநீக்கம் செய்தது.

வழக்கறிஞரின் விளக்கமும் குற்றச்சாட்டுகளும்

இந்தச் சம்பவம் தொடர்பாகச் பேட்டி அளித்த ராகேஷ் கிஷோர், தனது செயலுக்கான காரணத்தைக் கூறினார்:

"கடந்த செப்டம்பர் 16 அன்று தலைமை நீதிபதியின் அமர்வில், கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்கக் கோரிய பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், 'சிலையை மீட்டெடுக்கக் கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கேலி செய்து மனுவைத் தள்ளுபடி செய்தார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்னைக் காயப்படுத்தியது.

நீங்கள் நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் அதைக் கேலி செய்யாதீர்கள். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது அநீதி. நான் வன்முறையை எதிர்க்கிறேன், ஆனால் எந்தக் குழுவையும் சாராத ஒரு சாதாரண மனிதனான நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். அது அவரது செயலுக்கான எனது எதிர்வினை. நான் அதற்காகப் பயப்படவில்லை, எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றார்.

தலைமை நீதிபதி குறித்து விமர்சனம்

ராகேஷ் கிஷோர் தொடர்ந்து பேசுகையில், "தலைமை நீதிபதி ஓர் அரசியலமைப்புப் பதவியில் அமர்ந்திருக்கிறார், மேலும் அவர் 'மை லார்ட்' என்று அழைக்கப்படுகிறார். எனவே அவர் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு கண்ணியத்தைப் பராமரிக்க வேண்டும்" என்று கூறினார்.

தனது செயலுக்கான காரணம் குறித்து அவர் கூறும்போது, "நான் எதையும் செய்யவில்லை, கடவுள் என்னை அதைச் செய்ய வைத்தார்" என்று தெரிவித்தார். "செப்டம்பர் 16-க்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை. ஏதோ ஒரு தெய்வீக சக்தி என்னை எழுப்பி, 'நாடு எரிகிறது, நீங்கள் தூங்குகிறீர்களா?' என்று கேட்டது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பார் கவுன்சில் மீதான புகார்

பார் கவுன்சில் தன்னை இடைநீக்கம் செய்தது குறித்து பேசிய அவர், "வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 35-இன் கீழ், நான் பார் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். என் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு ஒரு ஒழுங்குமுறைக் குழு அமைக்கப்பட வேண்டும், அது நோட்டீஸ் அனுப்பும், நான் பதிலளிப்பேன். ஆனால், பார் கவுன்சில் என் வழக்கில் விதிகளையே மீறிவிட்டது" என்று ராகேஷ் கிஷோர் குற்றம் சாட்டினார்.

"தலைமை நீதிபதி என்னை விடுவித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. போலீஸ் என்னை 3-4 மணி நேரம் விசாரித்தது. நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. கடவுள் என்னை இதைச் செய்ய வைத்தார்" என்று அவர் கூறினார்.