இந்தியா

மது போதையில் துன்புறுத்திய கணவன்: பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இரு மனைவிகள்!

தெலுங்கானா மாநிலத்தில், கணவனை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்த இரு மனைவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மது போதையில் துன்புறுத்திய கணவன்: பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இரு மனைவிகள்!
Two wives doused their husband with petrol and set him on fire
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், மது அருந்திவிட்டுத் தினமும் துன்புறுத்தி வந்த கணவனை, அவரது இரு மனைவிகளும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

தெலங்காணா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், பீம்கல் மண்டலம், தேவக்கபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மலவத் மோகன் (வயது 42). விவசாயியான இவருக்கு கவிதா, சங்கீதா என்ற இரு மனைவிகள் உள்ளனர். இவர்கள் இருவரும் சொந்தச் சகோதரிகள் ஆவர். முதல் மனைவி கவிதாவுக்கு மூன்று பெண் குழந்தைகளும், இரண்டாவது மனைவி சங்கீதாவுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மோகன் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதால், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து இரு மனைவியரையும் கொடுமைப்படுத்துவதும், சந்தேகப்பட்டுத் தினமும் துன்புறுத்துவதும் வழக்கமாக இருந்துள்ளது.

கொலையும் தப்பி ஓட்டமும்

இதேபோல, கடந்த 23 ஆம் தேதி இரவும் மோகன் இரு மனைவியரையும் பயங்கரமாகத் தாக்கி, ஒரு அறையில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இனியும் இதைத் தாங்க முடியாது என்று முடிவெடுத்த கவிதாவும், சங்கீதாவும் கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.

அதன்படி, 24 ஆம் தேதி காலையில் பெட்ரோல் வாங்கி வந்த இருவரும், வீட்டு முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த மோகன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தனர். தீப்பிடித்து எரிந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இரு மனைவிகளும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

காவல்துறை விசாரணை

இறந்த மோகனின் சகோதரர் ரவி அளித்த புகாரின் பேரில் பீம்கல் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள இரு மனைவிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.