இந்தியா

இந்தியாவில் முதல்முறை: கேரள நீதிமன்றங்களில் AI தொழில்நுட்பம் அறிமுகம்!

இந்தியாவில் முதல் முறையாக, கேரள நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பேச்சு-எழுத்து (Speech-to-text) கருவியைப் பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறை: கேரள நீதிமன்றங்களில் AI தொழில்நுட்பம் அறிமுகம்!
Kerala High Court mandates Adalat AI speech-to-text tool in all district courts
இந்தியாவில் முதல் முறையாக, கேரள உயர் நீதிமன்றம் ஒரு முன்னோடி நடவடிக்கையாக, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் 'அடாலத் AI' (Adalat AI) என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பேச்சு-எழுத்து (Speech-to-text) கருவியைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களைப் பதிவு செய்வதற்காக இந்தத் தொழில்நுட்பம் நவம்பர் மாதம் முதல் அனைத்து விசாரணை நீதிமன்றங்களிலும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

தாமதத்தைத் தவிர்க்க புதிய முயற்சி

கடந்த 27 ஆம் தேதி அன்று உயர் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்றின்படி, இந்த முயற்சியானது ஆதாரங்களைப் பதிவு செய்வதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும், வாக்குமூலம் அளிக்கும் நடைமுறையை நவீனப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள உயர் நீதிமன்றத்தின் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் ஜோசப் ராஜேஷ் பேசுகையில், "மாவட்ட நீதிமன்றங்களில் தட்டச்சு செய்பவர்களின் (Typists) பற்றாக்குறை காரணமாக, பல நீதிபதிகள் இதுவரை சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கைகளால் எழுதிப் பதிவு செய்து வந்தனர். பின்னர், அந்த கையெழுத்துப் படிகளைப் படிக்கக்கூடிய நகல்களாக மாற்றுவது நேரம் எடுக்கும் செயல்முறையாக இருந்தது. இதனால் வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன," என்று கூறினார்.

செயல்படும் முறை

"இந்த AI அமைப்புடன், மனிதத் தலையீடு இருக்காது; நீதிபதியும், எழுத்து மாற்றுக் கருவியும் (Transcription tool) மட்டுமே இருக்கும். சாட்சி தான் அளித்த வாக்குமூலத்தைச் சரிபார்த்து கையெழுத்திடுவதற்கு வசதியாக, சாட்சிக் கூண்டில் ஒரு திரையும் (Screen) வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் உடனடியாக கிளவுட் சேமிப்பகத்தில் (Cloud) பதிவேற்றப்படும். இதனால், பதிவுசெய்த வழக்கறிஞர்கள் உடனடியாக அவற்றைப் பார்க்க முடியும்" " என்று ராஜேஷ் விளக்கினார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் இத்தகைய AI அமைப்பை அமல்படுத்தும் முதல் நீதிமன்றம் கேரள உயர் நீதிமன்றம் ஆகும்.

அடாலத் AI நிறுவனர் உத்கர்ஷ் சக்ஸேனா கூறுகையில், "இந்தக் கருவி உள்ளூர் மொழியில் துல்லியமான எழுத்து மாற்றத்தை உறுதிப்படுத்த, மலையாள மொழிக்காகச் சிறப்புச் சட்டப் பேச்சு மாதிரி (Specialised legal speech model in Malayalam) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியா AI மிஷன் ஆதரவு அளித்துள்ளது என்று தெரிவித்தார்.