இந்தியா

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமல்: நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி- பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவது நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமல்: நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி- பிரதமர் மோடி
PM Modi
ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை (செப்.22) முதல் அமலுக்கு வருவதாகவும், இதன் மூலம் மக்களுக்கு வருமான வரிச் சலுகைக்குப் பிறகு இரண்டாவது பரிசாக இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது எனத் தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தம் இந்தியாவின் சேமிப்புத் திருவிழா என்று குறிப்பிட்டார்.

ஒரே நாடு, ஒரே வரி

"சம்பந்தப்பட்ட அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட இந்த ஜிஎஸ்டி மாற்றத்தால், 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற கனவு நனவாகியுள்ளது. வருமான வரி குறைப்பு மூலம் மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. இப்போது, ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்" என்று அவர் கூறினார்.

99% பொருட்களுக்கு 5% வரி

ஜிஎஸ்டியில் 6 சதவீதம், 18 சதவீதம் ஆகிய வரி வரம்புகள் மட்டுமே பெரும்பாலான பொருள்களுக்கு விதிக்கப்படும். சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99 சதவீதப் பொருட்களின் வரி 5 சதவீதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், ரொட்டி, பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளை முதல் குறையும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், மகளிர், விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கும்.

பொருளாதார வளர்ச்சி

"ஜிஎஸ்டி சீர்திருத்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். பல்வேறு மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன. வருமான வரிச்சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டு ரூ.2.5 லட்சம் கோடி வரை மக்களின் செலவு குறையும். ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினராக உயர இந்த வரி குறைப்பு உதவும்" என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சுயசார்பு இந்தியா

'சுயசார்பு இந்தியா' என்ற இலக்கை எட்ட, மக்கள் உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். "உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தினால் மட்டுமே சுயசார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும். சர்வதேச அளவில் சிறந்த தரத்தோடு இந்திய நிறுவனங்கள் பொருட்களைத் தயாரிக்க வேண்டும். உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும்" என்று அவர் குறிப்பிட்டார்.