Rahul Gandhi with Priyanka Visit Wayanad Landslide Victims : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள்,சிறு சிறு வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன.
வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே மண்ணில் புதையுண்டும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 282க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. முண்டகை மற்றும் சூரல்மலை இடையே பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதால் இரு பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் ராணுவ வீரர்கள் இரு பகுதிகளுக்கும் இடையே மிகப்பெரிய இரும்பு பாலம் ஒன்றை அமைத்து, அதன் வழியாக ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்ட தளவாடங்களை கொண்டு சென்று மண்ணுக்குள் புதையுண்ட உடல்களை மீட்டு வருகின்றனர். அங்கு மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிக்கு பெரும் சவாலாக உள்ளது.
சாலியாற்றில் பல கிமீ தூரத்துக்கு ஏராளமான உடல்கள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வயநாடு சென்றனர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் வயநாடு சென்றடைந்த இருவரும், நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை பகுதிகளுக்கு சென்றனர். தொடர்ந்து கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் ரெயின் கோட் அணிந்து ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பாலம் வழியாக நடந்து சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
மேலும் அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்து இருவரும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் நிலச்சரிவால் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வயநாடு VIMS மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ''எனது தந்தை இறந்தபோது நான் எந்த அளவு துக்கத்தை சந்தித்தேனோ, அதே துக்கத்தை இன்று சந்தித்துள்ளேன். மக்கள் தந்தையை மட்டும் இழக்கவில்லை. ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் உறவுகளை இழந்துள்ளனர்'' என்றார்.
தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய புகைப்படங்களை வெளியிட்ட ராகுல் காந்தி, ''இந்த கடினமான நேரத்தில் நானும், பிரியங்காவும் வயநாடு மக்களுடன் உள்ளோம். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணி, நிவாரண பணி மற்றும் மக்களுக்கான மறுவாழ்வு முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் உறுதி அளித்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பின்பு அவர் வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.