தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ரத்தன் டாடா வணிக சின்னமாக மட்டுமின்றி பணிவு, நேர்மை மற்றும் இரக்கத்தின் அடையாளமாகவும் இருந்தார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
தொழில் மற்றும் சமூகத்திற்கு அவரது பங்களிப்புகள் அழியாத முத்திரையை பதித்துள்ளன எனக் கூறியுள்ள அவர், ரத்தன் டாடாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடாவை சந்திக்கும் ஒவ்வொரு முறையும், இந்தியாவையும் மக்களையும் மேம்படுத்துவதற்கான அவரது ஆர்வம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.
நாடு மற்றும் மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான கனவுகளை மலர வழிவகுத்தது எனவும் அவர் நம் இதயங்களில் என்றும் வாழ்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், ரத்தன் டாடாவின் மறைவு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.
நமது பொருளாதாரம், தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்கு செய்த பங்களிப்பு அவரை தொழில்துறையின் டைட்டனாக மாற்றியது எனவும் அவர் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடாவின் மறைவு டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் பேரிழப்பு எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: உலகை நேசித்த மனிதர் ரத்தன் டாடா காலமானார்!
இந்தியா தனது புகழ்பெற்ற மற்றும் தாயுள்ளம் கொண்ட ஒருவரை இழந்துள்ளது எனவும் அவர் எப்போதும் தனது இதயத்தில் நீங்காமல் இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்..