இந்தியா

பீகார் அரசியல்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்!

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் இன்று வழங்கினார்.

பீகார் அரசியல்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்!
Nitish Kumar resigns as Chief Minister
நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாபெரும் வெற்றியடைந்து ஆட்சியைத் தக்கவைத்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் வரும் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

ராஜினாமா மற்றும் புதிய ஆட்சித் தொடக்கம்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் அங்கம்வகித்த பாரதிய ஜனதா கட்சி 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வருகிற 20 ஆம் தேதி அன்று 10-வது முறையாகப் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்க உள்ளார்.

முன்னதாக, நிதிஷ் குமார் தலைமையிலான தற்போதைய ஆட்சியின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் இன்று ஆளுநர் ஆரிஃப் முகமது கானைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதுடன், சட்டப்பேரவையைக் கலைக்கப் பரிந்துரையும் செய்தார். நவம்பர் 19-ஆம் தேதி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு, நவம்பர் 20-ல் அவர் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவைப் பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு

புதிய அமைச்சரவையில் இடம்பெறும் துறைகள் மற்றும் பங்கீடுகள் குறித்த எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பாரதிய ஜனதா கட்சிக்கு 15 முதல் 16 அமைச்சர் பதவிகள், ஐக்கிய ஜனதா தளத்துக்கு சுமார் 14 பதவிகள், சிராஜ் பஸ்வானின் LJP (ராம் விலாஸ்) கட்சிக்கு 3 பதவிகள், மற்றும் ஜிதன் ராம் மாஞ்சியின் HAM மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் RLM ஆகிய கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்கள்

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச மிதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகத் கூறப்படுகிறது.