இந்தியா

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை- உச்சநீதிமன்றம்

தெருநாய்களை பிடித்துக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைப்பு

 தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை- உச்சநீதிமன்றம்
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்துப் பராமரிக்க வேண்டும். இதனை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.இதற்கு நாடு முழுவதும் உள்ள செல்லப் பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதுகுறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கவனித்தில் எடுத்துக்கொள்ளும் எனத் தெரிவித்தது.இது தொடர்பாக ஆகஸ்ட் 14ம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி உத்தரவு ஏதுவும் பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, டெல்லி தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துப் புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.

பொது இடங்களில் உணவளிக்க தடை

2024ஆம் ஆண்டில் 37 லட்சம் நாய் கடி வழக்குகள் மற்றும் 54 சந்தேகிக்கப்படும் ரேபிஸ் இறப்புகள் ஆகியவற்றின் தரவுகளை மேற்கோள் காட்டி, பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறை பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில், தெரு நாய்களுக்குத் தெருக்கள் போன்ற பொது இடங்களில் உணவளிக்க அனுமதிக்கப்படாது. அதற்கெனத் தனியாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கு உணவளிக்க வேண்டும்.

நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்

மேலும் பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும். மேலும் உயர்நீதிமன்றங்களில் உள்ள தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் தலைமைச் செயலாளர்கள் பதில் அளிக்க வேண்டும் என 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தெருநாய்கள் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னதாக, டெல்லி ஜந்தர் மந்தரில் விலங்கு ஆர்வலர்கள் திரண்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.