Andhra Pradesh New Liquor Policy 2024 : ஆந்திராவில் எந்த பிராண்ட் மதுபானமாக இருந்தாலும் 180 மிலி 99 ரூபாய்க்கு விநியோகம் செய்வதற்கான புதிய மதுபானக் கொள்கை ஒப்புதலாகியிருக்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்தச் சொல்லி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இதே நேரத்தில் ஆந்திர அரசால் புதிய மதுபானக் கொள்கை கொண்டு வரப்பட்டு ஒப்புதலாகியிருக்கிறது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த புதிய மதுபானக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி எந்த மதுபான பிராண்டாக இருந்தாலும் 180 மிலி மதுவை 99 ரூபாய்க்கு விற்பனை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.பார்த்தசாரதி, புதிய மதுபானக் கொள்கை குறித்துக் கூறுகையில், மதுபானக் கடைகளுக்கான டெண்டர் குலுக்கல் முறையில் தனியாருக்கு வழங்குவதென அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மதுபானக் கடைகளுக்கான உரிமை கோருபவர்களிடம் திருப்பித் தரப்படாத விண்ணப்பக் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், உரிமக் கட்டணமாக 50 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரை நான்கு அடுக்குகளாக வசூலிக்கப்படும் என்றும் புதிய மதுபான கொள்கை தெரிவிக்கிறது.
இந்த மதுபானக் கடைகளில் காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி 12 பிரீமியம் கடைகளுக்கு 5 ஆண்டு கால அவகாசத்துடன் அரசு உரிமம் வழங்கப்படும் என்றும், இந்தப் பிரீமியம் கடைகளுக்கான திருப்பிச் செலுத்தப்படாத விண்ணப்பக் கட்டணம் 15 லட்ச ரூபாயாகவும், உரிமக் கட்டணம் ஒரு கோடி ரூபாயாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் பார்த்தசாரதி கூறியிருக்கிறார். ஆன்மிக நகரமான திருப்பதியில் திருப்பதியில் பிரீமியம் மதுபானக் கடைகள் அனுமதிக்கப்படாது என்று அவர் கூறியிருக்கிறார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய மதுபானக் கொள்கை நீங்கலாக வேறு பல முடிவுகளும் எடுக்கப்பட்டன.