இந்தியா

லடாக்கில் ஆற்றைக் கடந்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம்.. தலைவர்கள் இரங்கல்

லடாக்கில் ராணுவ வீரர்கள் பயிற்சி வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்கில் ஆற்றைக் கடந்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம்.. தலைவர்கள் இரங்கல்
5 Soldiers In Tank Swept Away While Crossing River Near Ladakh

லே: லடாக்கில் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் பயிற்சியின்போது, டேங்கர் லாரியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்களும் இன்று காலை முதல் மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். மந்திர் மோர் என்ற இடம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தை அடுத்து, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இதனிடையே நீண்ட போராட்டத்துக்குப் பின் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகனம் கவிழ்ந்து அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ஆற்றின் குறுக்கே கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் கொள்கிறேன். தேசத்திற்கு நமது துணிச்சலான வீரர்கள் அளித்த முன்மாதிரியான சேவையை ஒருபோதும் மறக்க மாட்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது என தெரிவித்துள்ளார்.