சினிமா

நடிகர் அஜித்குமார் படத்தை இயக்குவீர்களா? லோகேஷ் கனகராஜ் சுவாரஸ்ய பதில்

நடிகர் அஜித் குமாரை வைத்து படம் இயக்குவது குறித்து லோகேஷ் கனகராஜ் முக்கிய தகவல் கொடுத்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் படத்தை இயக்குவீர்களா? லோகேஷ் கனகராஜ் சுவாரஸ்ய பதில்
Ajith Kumar and Lokesh Kanagaraj
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

'கூலி' படத்தில் இதுவரை வெளியான 'சிக்கிடு', 'மோனிகா' மற்றும் 'பவர் ஹவுஸ்' பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அஜித் குமார் நடிப்பில் படம் இயக்குவது குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். "அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன். இது 100 சதவீதம் உறுதி. அவரது ஆக்‌ஷன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக சில மாதங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் கார் ரேஸிலும் நான் என் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக இருப்பதால் கொஞ்சம் தள்ளிப்போகிறது. ஆனால், நிச்சயமாக நடக்கும். எனக்கும் அவருக்கும் ஒரு டைம்லைன் வரும் பொழுது கண்டிப்பாக படத்தை இயக்குவேன். அவரை இயக்குவது என் ஆசைகளில் ஒன்று," என அவர் தெரிவித்துள்ளார். லோகேஷின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.