சினிமா

என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள்… KPY பாலா பேட்டி

என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள், சந்தோசமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான் என கோவையில் KPY பாலா பேட்டி

என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள்… KPY பாலா பேட்டி
KPY பாலா
கோவையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற KPY பாலா எத்தனை தடைகள் வந்தாலும், மக்களுக்காக நல்லது செய்துக்கொண்டே இருப்பேன் என் மீது விமர்சனம் செய்து சம்பாதிக்கிறார்கள் அவர்கள் மீது எந்தவிதமான புகார் கொடுக்கப் போவதில்லை தொடர்ந்து சேவைகள் மட்டுமே செய்வேன் தெரிவித்துள்ளார்.

நல்லது செய்யவே தடைகள் உள்ளன

விழாவில் பேசிய அவர், பிரச்சனைகள் இருப்பதால்தான் நல்ல காரியங்களை செய்கிறோம். ஆனால், நல்லது செய்யவே இங்கு பல தடைகள் உள்ளன என்றார். இத்தனை நாட்கள் நல்லவற்றை செய்தபோது யாரும் வரவில்லை. திடீரென வந்து விமர்சிக்கிறார்கள். உண்மையில் கடவுள் சக்தியும், மக்கள் சக்தியும் மட்டுமே உண்மையானவை. இப்போதெல்லாம் ஒருவருக்கு உதவி செய்தால், அதை யாரும் பார்க்க மாட்டார்கள். ஆனால், மிகைப்படுத்தி வீடியோவாக வெளியிட்டால் மட்டுமே கவனிக்கப்படுகிறது என்றார்.

கடந்த மூன்று நாட்களாக எனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஒரு பிரபலம், ‘நல்லது செய்யாதே, ஈசிஆரில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிடு’ என்று எச்சரித்தார். இதை சிந்தித்தபோது, நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்தேன். ஆனால், ஒரு கவிஞர், ‘நல்லவனாக இருப்பது தவறல்ல, ஆனால் அதை நிரூபிக்க தொடர்ந்து நல்லது செய்ய வேண்டும்’ என்றார். மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள், அது எனக்கு போதுமானதாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாலா, ‘ காந்தி கண்ணாடி’ படத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறாக பேசி, அதன் மூலம் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுக்கப் போவதில்லை. அதன் மூலம் அவர்கள் சம்பாதித்து சந்தோஷமாக இருந்தால், எனக்கும் சந்தோஷம் என தெரிவித்தார். அவர்களுக்கு பணம் கிடைப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கவில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். சினிமா துறையில் உள்ள லாபிகள் பற்றி எனக்கு தெரியாது. உதவி செய்வது எனது பொழுதுபோக்கு என்று கூறினார்.