அரசியல்

“திமுக நேற்று முளைத்த காளான் அல்ல” –அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

கருப்பு ,சிவப்பு வேஷ்டி கட்டிக்கொண்ட சென்றாலே நம்மை அறியாமல் ஒரு கம்பீரம் வரும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சு

“திமுக நேற்று முளைத்த காளான் அல்ல” –அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை மேலரத வீதியில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் செந்தில்வேல் சிறப்புரையாற்றினார். முன்னதாக ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திமுகவில் இருப்பதே பெருமை

இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ்ஆர் ராமச்சந்திரன், திராவிட முன்னேற்றக் கழகம் நேற்று முளைத்த காளான் அல்ல. 75 ஆண்டுகாலம் எத்தனையோ எதிர்ப்பை தாண்டி வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதே நமக்கு மிகப்பெரிய பெருமை.

கருப்பு ,சிவப்பு வேஷ்டி கட்டிக்கொண்ட சென்றாலே நம்மை அறியாமல் ஒரு கம்பீரம் வரும். இது திராவிட ரத்தம் நாம் திராவிடம். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த என் தலைவர் அண்ணா என் தலைவர் கலைஞர் இன்றைய தலைவர் ஸ்டாலின், நாளைய தலைவர் உதயா என பாரம்பரியமிக்க ஒரு கட்சி. இந்த கட்சியை பலர் அழிக்க நினைக்கிறார்கள் அழித்து விடுவோம் என சொல்கிறார்கள். அண்ணா காலத்தில் இருந்து சொல்லி வருகிறார்கள் அப்படி சொன்னவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள்.

திமுக என்றைக்கும் அழிந்துவிடாது

கலைஞரை எத்தனையோ பேர் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இறந்தபின் அந்த தலைவர்களுக்கு எல்லாம் உரிய மரியாதை அளித்தவர் நம் ஸ்டாலின். எதிராளியாக இருந்தாலும் அவர்களை மதிக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.

பல கட்சிகள் வருகிறது போகிறது. இந்திய வரலாற்றிலேயே முதல் முதலில் தமிழ்நாட்டில் ஒரு மாநில கட்சி முதலமைச்சராக வர முடியும் என சொல்லியது திமுக தான். நம் மொழியையும் நம் மண்ணையும் காக்கக்கூடிய சக்தியாக திமுக இருப்பதால்தான் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள்.

திமுக தான் நம்முடைய எதிர்காலத்தை பாதுகாக்கும். இந்த இயக்கத்தை அண்ணாவிடம் இருந்து கலைஞர் பெற்றார்கள் கலைஞரிடம் இருந்து ஸ்டாலின் பெற்றார். 25 ஆண்டுகள் ஸ்டாலின் முதல்வராக இருப்பார். அடுத்த சந்ததியாக உதயா வருவார்கள். இந்த இயக்கம் என்றைக்கும் அழிந்து விடாது” என பேசினார்.