சினிமா

3 BHK எங்கள் கதையல்ல.. உங்கள் கதை: நடிகர் சித்தார்த் உருக்கம்!

'3 BHK' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படக்குழுவினர் சார்பில் நடைப்பெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் அருண் விஸ்வா மற்றும் இயக்குநர் ஸ்ரீகணேஷ் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

3 BHK எங்கள் கதையல்ல.. உங்கள் கதை: நடிகர் சித்தார்த் உருக்கம்!
Siddharth 3BHK movie Connects with Audiences and Team Thanks Sivakarthikeyan for Support
சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் சார்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

அனைவரும் விரும்பி வேலை பார்த்தோம்:

விழாவில் பங்கேற்ற நடிகர் சித்தார்த் கூறுகையில், “இந்தப் படத்தின் கருத்துதான் ஹீரோ. அப்படியான கதையை அமைத்துக் கொடுத்த எனது படக்குழுவினருக்கு நன்றி. என்னுடைய நாற்பதாவது படம் வெற்றியாக அமைந்துள்ளது. எந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை எடுத்தோமோ அதையே பார்வையாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை படித்து முடித்ததும் என் அப்பாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. அதேமாதிரியான போஸ்டர்தான் இப்போது தேங்க்ஸ் கிவிங் மீட்டிலும் உள்ளது. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருமே கதையை விரும்பி வேலை பார்த்தார்கள். எல்லா கதாபாத்திரங்களையும் பார்வையாளர்கள் தங்களுடனும் தங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் ரிலேட் செய்தார்கள்”

”இந்தப் படம் இவ்வளவு அழகாக வரக் காரணமே சரத் சார், தேவயாணி மேம்தான். வாழ்க்கையில் இவ்வளவு உயரம் வந்தபிறகும் ஒரு சாதாராண மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையை திரையில் கொண்டு வரும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து வலியை புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது பெரிய விஷயம். சைத்ரா, மீதா இருவரது திறமைக்கு இன்னும் பல நல்ல படங்கள் கிடைக்கும். தயாரிப்பாளர் அருண் விஸ்வாவும் இந்தப் படத்தை தன் குழந்தையாகப் பார்க்கிறார். இது எங்கள் கதையல்ல, உங்கள் கதை!” என்றார்.

இசையமைப்பாளருக்கு என்னுடைய வாட்ச் பரிசு:

நடிகர் சரத்குமார் பேசுகையில், “ஒரு சிறிய வீட்டிற்குள் நடப்பதை ஒளிப்பதிவில் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். சண்டை, பாட்டு என கமர்ஷியல் விஷயங்களைக் கொண்டு வராமல் தான் நினைத்ததை திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். அவர் ரொம்பவே மென்மையானவர். அம்ரித் இசையில் பின்னியெடுத்திருக்கிறார். அவர் என்னுடைய வாட்ச் பிடித்திருக்கிறது என்று சொன்னார். அவருக்கு பிடித்த என்னுடைய வாட்சையே பரிசளிக்கிறேன். தேவயாணி நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. அருண் விஸ்வா தயாரிப்பில் தேவயாணி இயக்கத்தில் நானும் சித்தார்த்தும் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம். மீதாவும் சைத்ராவும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர்:

இயக்குநர் ஸ்ரீகணேஷ் பேசுகையில், “மீடியா மக்கள் நல்லபடியாக படம் பற்றி எழுதி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு நன்றி. என்னுடைய இரண்டாவது படம் சரியாக எடுக்க முடியாமல் போனது. ஆனால், மூன்றாவது படத்தை நன்றாக உழைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வார்த்தையை ‘3BHK’ திரைப்படம் காப்பாற்றி கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எமோஷனல், ஃபேமிலி ஸ்டோரி எடுத்தால் நிச்சயம் குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பார்கள் என்று நம்பினோம். அது இப்போது நடந்து வருகிறது. இது எங்களுடைய கதை என படம் பார்ப்பவர்கள் சொல்வதை கேட்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது.

படத்திற்கு வாய்ஸ் ஓவர் செய்து கொடுத்த கார்த்தி சாருக்கு நன்றி. எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் சிறுகதையில் இருந்துதான் இந்தப் படம் தோன்றியது. இந்தப் படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை படம் பார்த்துவிட்டு தன்னுடைய முழு ஆதரவையும் நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்தார். அவர் எனக்கு அண்ணன் போலதான். அதேபோல, படத்தின் முதல் காட்சியை தொடங்கி வைத்த இயக்குநர் ராம் அவர்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டார்.