தமிழ்நாடு

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை
போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது மேலும் ஒரு மோசடி புகார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் மரணமடைந்தார். இவர் மீது நகையை திருடியதாக புகார் கொடுத்தவர் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் நிகிதா. இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் தாவரவியல் துறையின் தலைவராக உள்ளார். அஜித்குமார் மரணமடைந்த நாள் முதல் விடுப்பு எடுத்திருந்த நிலையில் இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார்.

மோசடி புகார்

நிகிதா மீது ஏற்கனவே மோசடி புகார்கள் இருந்து வரும் நிலையில், சென்னையிலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் 2011-ல் நிகிதாவின் சகோதரர் கவியரசு, தனக்கு துணை முதலமைச்சரின் உதவியாளரை தெரியும், அதன் மூலம் அவரது குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.48 லட்சம் ரூபாயை நிகிதாவும், அவரது சகோதரர் கவியரசுவும் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

வேலை குறித்து கேட்டதற்கு, அது கிடைக்கும் என காலம் தாழ்த்தி வந்தவர்கள் பின்னர் மொபைலை அணைத்து விட்டு தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் குறித்து பிற நண்பர்களிடம் விசாரிக்கையில் அவர்களிடமும் இதேபோல வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாயை பெற்று ஏமாற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை

2011-ல் வெவ்வேறு மோசடி வழக்குகளில் சிறை சென்று நிகிதா குடும்பத்தினர் ஜாமினில் வெளியே வந்த பின்னர் அவர்களிடம் பணத்தை செந்தில்குமார் கேட்டதற்கு, காவல்துறையில் புகாரளிக்க வேண்டாம், சொத்தை விற்று கூட பணத்தை கொடுத்து விடுகிறோம் என மீண்டும் ஏமாற்றியுள்ளனர்.

நிகிதா, அவரது சகோதரர் கவியரசு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு செந்தில்குமார் தற்போது சென்னை எழும்பூர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகாரித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணையை துவக்கவுள்ளனர்.