சினிமா

'அஜித் சாருடன் அடுத்த படம்'.. உறுதி செய்த ‘குட் பேட் அக்லி’ இயக்குநர்

அஜித்தின் 64-வது படத்தை இயக்க இருப்பதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்திருக்கிறார்.

'அஜித் சாருடன் அடுத்த படம்'.. உறுதி செய்த ‘குட் பேட் அக்லி’ இயக்குநர்
AK-64 Movie
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகளவில் ரூ.220 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அஜித் தனது 64-வது படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக பேட்டியளித்த அவர், தனது 64-வது படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என தெரிவித்தார்.

மேலும், இந்த படத்தை ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளளவும் கூறப்படுகிறது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகாமல் இருந்தது.

மேலும், அஜித்தின் 64-வது படம் குறித்து அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு இன்ப செய்தியை கொடுத்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூலை 19) நடைபெற்றது. இதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டார். இந்த விழா நிறைவுபெற்ற பின் வெளிய வந்த அவரிடம் அஜித்தின் 64-வது படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “அடுத்த அஜித் சார் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம். ‘குட் பேட் அக்லி’ படம் மாதிரியே அடுத்த படத்தையும் கேங்ஸ்டர் படமாக உருவாக்க முடியாது. வித்தியாசமான கதைக்களத்தில் பண்ண வேண்டும். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

‘குட் பேட் அக்லி’ இந்த ஆண்டின் பெரிய வெற்றிப் படம் என்கிறார்கள். அது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதே மாதிரி வேறு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எந்த பட்ஜட்டில் எடுக்கப்பட்ட படமானாலும், நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெற்றியைப் பெற்றிருக்கிறது” என தெரிவித்தார்.

இந்த நிலையில், அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி உறுதியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.