சினிமா

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!
Actress Ranya Rao fined Rs. 102 crore
துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில், கன்னட நடிகை ரன்யா ராவுக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ரூ.102 கோடி அபராதம் விதித்துள்ளதாக நேற்று தெரிவித்தது. இந்த வழக்கில் நடிகையுடன் சேர்த்து, மேலும் மூவருக்கு மொத்தம் ரூ.270 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

நடிகை ரன்யா ராவ், போலீஸ் டி.ஜி.பி. தரத்திலான அதிகாரியான கே.ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 3-ஆம் தேதி, துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த ரன்யா ராவ், சட்டவிரோதமாக ரூ.12.50 கோடி மதிப்புள்ள 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், 2023 முதல் 2025-ஆம் ஆண்டுவரை 34 முறை துபைக்குச் சென்று வந்த ரன்யா ராவ், சட்டவிரோதமாக ரூ.40 கோடி மதிப்புள்ள 49.6 கிலோ தங்கம் கடத்தியதோடு, வரி ஏய்ப்பு மற்றும் பணப் பதுக்கல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில், தருண் கொண்டராஜு மார்ச் 9-ஆம் தேதி, சாஹில் சக்காரியா ஜெயின் மார்ச் 26-ஆம் தேதி மற்றும் பரத்குமார் ஜெயின் ஜூலை 23-ஆம் தேதி ஆகிய நாட்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூ.270 கோடி அபராதம்: பெங்களூரு சிறையில் நோட்டீஸ்

இந்த வழக்கில் நடிகையுடன் சேர்த்து, ஹோட்டல் உரிமையாளர் தருண் கொண்டரஜூக்கு ரூ.63 கோடி அபராதமும், நகை வியாபாரிகளான சஹில் சக்காரியா ஜெயின் மற்றும் பரத் குமார் ஜெயினுக்கு தலா ரூ.56 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், பெங்களூரு மத்திய சிறைக்குச் சென்று, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 250 பக்கங்கள் கொண்ட நோட்டீஸையும், 2,500 பக்கங்கள் கொண்ட துணை ஆவணங்களையும் வழங்கினர். மொத்தம் 11,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வழங்கப்பட்டன.

வழக்கு நிலவரம்

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்படாததால் ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும், அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகளின் தடுப்புச் சட்டம் (கோஃபெபோசா) வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருந்ததால், தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான கோஃபெபோசா மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.