சினிமா

'பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்..' நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள்!

சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை காஜல் அகர்வால், தான் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

'பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்..' நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள்!
Actress Kajal Aggarwal's explanation
நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு, அவரே பொதுவெளியில் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்தச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், தான் நலமாக இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பதிவு

நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் உயிரிழந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்த நிலையில், சாலை விபத்தில் தான் உயிரிழந்துவிட்டதாகக் கிளம்பிய வதந்திகளுக்கு காஜல் அகர்வால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் விபத்தில் சிக்கி உயிருடன் இல்லை என சில ஆதாரமற்ற செய்திகள் பரவி வருகின்றன. அது முற்றிலும் பொய்யானது, இது எனக்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. இறைவன் அருளால் நான் மிகவும் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தயவுசெய்து இதுபோன்ற பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம், பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் உண்மையை மட்டும் பரப்புவதில் கவனம் செலுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் நிம்மதி

காஜல் அகர்வால் இந்தச் செய்தியை வெளியிட்ட பிறகு, அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், வதந்திகளை அவர் கண்ணியத்துடன் கையாண்ட விதம் குறித்துப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான காஜல் அகர்வால், 2004-ல் வெளியான 'கியூன்! ஹோ கயா நா...' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இவர் 'துப்பாக்கி' மற்றும் 'டெம்பர்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கண்ணப்பா திரைப்படத்தில் பார்வதி தேவி கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, தி இந்தியன் ஸ்டோரி, இந்தியன் 3 மற்றும் ராமாயணா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

கடந்த 2020-ல் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால், தனது கணவர் மற்றும் மகன் நீல் உடன் மும்பையில் வசித்து வருகிறார்.