சினிமா

நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு!

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு!
Dadasaheb Phalke Award for actor Mohanlal
இந்திய சினிமாவுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கு அவர் செய்த மிகப் பெரிய பங்களிப்பைப் பாராட்டி, மத்திய அரசு இந்த விருதை அவருக்கு வழங்குகிறது. வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்குக் கொடுக்கப்படும்.

மோகன்லாலின் திரை வாழ்க்கை

மோகன்லால் 1980-ஆம் ஆண்டு ஃபாசில் இயக்கிய 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் அவர், இதுவரை 400-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

64 வயதாகும் மோகன்லால், தனது நடிப்பிற்காக 5 தேசிய விருதுகள் மற்றும் 9 மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். இது தவிர, பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற பெரிய விருதுகளையும் மத்திய அரசு அவருக்குக் கொடுத்துள்ளது. மேலும், மலையாளத்தில் முதன்முதலாக ரூ.200 கோடி வசூல் செய்த படத்தைக் கொடுத்த நடிகர் இவர்தான்.

அடுத்த படம்

மோகன்லால் கடைசியாக 'ஹிருதய பூர்வம்' படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது நந்தா கிஷோர் இயக்கத்தில் 'விருஷபா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 16-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் அவர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தின் 2 பாகத்தில் நடித்து வருகிறார்.