தமிழ்நாடு

ஜிம் உடலை காட்டி பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது.. திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் அம்பலம்!

விவாகரத்து பெற்ற மற்றும் கணவரைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜிம் உடலை காட்டி பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது.. திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் அம்பலம்!
Young man arrested for deceiving women by showing off his gym body
சமூக வலைதளங்களில் தனது கட்டு மஸ்தான உடலமைப்பு புகைப்படங்களைப் பதிவிட்டு, திருமணம் ஆன பெண்களையும், விவாகரத்து பெற்ற பெண்களையும் குறிவைத்து ஏமாற்றி பணம் பறித்து வந்த ஒரு இளைஞரை தேனாம்பேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஒரு பெண்ணிடம் இருந்து 2 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிய வழக்கில் சிக்கி, அதன் பிறகுதான் அவரது மோசடிகள் அம்பலமாகியுள்ளன.

நகை திருட்டு சம்பவம்

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த கணக்காளராக வேலை செய்யும் ஒரு பெண், தனது கணவர் இறந்த நிலையில், மறுமணம் செய்து கொள்ள ஒரு தனியார் திருமண வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அதில், பதிவு செய்திருந்த சுரேஷ் குமார் என்பவருடன் பேசி வந்துள்ளார். சுரேஷ் குமார் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால், அந்தப் பெண் அவரை நம்பி இரண்டு முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி, வள்ளுவர் கோட்டம் அருகே காரில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் அணிந்திருந்த 2 சவரன் சங்கிலி அழகாக இருப்பதாகக் கூறி, அதை வாங்கிப் பார்த்த சுரேஷ் குமார், பின்னர் அதை அந்தப் பெண்ணின் கைப்பையில் வைப்பதைப் போல நடித்துள்ளார். சிறிது தூரம் சென்ற பின், தாகமாக இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை குளிர்பானம் வாங்க அனுப்பியுள்ளார். குளிர்பானம் வாங்கி வந்த அந்தப் பெண், கைப்பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சுரேஷ் குமாரைக் கேட்டபோது, அவர் முறையான பதில் சொல்லாமல் காரில் தப்பிச் சென்றுள்ளார்.

போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தேனாம்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சுரேஷ்குமாரின் காரை அடையாளம் கண்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரை கைது செய்தனர். 39 வயதான எம்.பி.ஏ. பட்டதாரியான சுரேஷ்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. எந்த வேலையும் செய்யாமல், ஜிம்முக்குச் சென்று உடலைக் கட்டமைத்து, அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெண்களை மயக்கி பணம் பறிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தது அம்பலமானது.

திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பெண்கள், கணவரைப் பிரிந்து வாழக்கூடிய பெண்கள் என நல்ல வேலையில் இருக்கும் பெண்களை மட்டுமே அவர் குறிவைத்து மோசடி செய்துள்ளார். மோசடி செய்தால், அவர்கள் காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கொடுக்க மாட்டார்கள் என அவர் நம்பியுள்ளார். தொழிலில் நஷ்டம், குழந்தைகளின் எதிர்காலம் போன்ற கட்டுக்கதைகளைச் சொல்லி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், ஒரு திரைப்படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படத்தைப் பயன்படுத்திப் பல பெண்களை ஏமாற்றியதாகவும், திருடிய நகையை விற்று ஐபோன் வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுரேஷ்குமார் மீது நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவரிடம் இருந்து ஒரு கார், ரூ.10,000 பணம் மற்றும் நான்கு செல்போன்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த செல்போன்கள் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சுரேஷ்குமாரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் புகார் அளிக்க முன்வரலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.